திருமாலின் திரிவிக்கிரமாவதார காலத்தில் அவன் திருவடிகள் உலகில் பரவியதைக் காணுமாறு சாம்பவான் பலமுறை பூமியை வலம் வந்தவனாதலால் உலகத்திலுள்ள பல செய்திகளைத் தெரிந்திருத்தல் பற்றி அவன் இந்த அசுரனைக் குறித்து இன்னானென்று வினவியறிந்திருந்தான் என்பது. தூ நிவந்த வேல்: துமிரனது வேலின் வெற்றிச் சிறப்பைக் கூறுவது. தூ - புலால். அங்கதன் இத் துமிரன் என்னும் அசுரனைக் கொன்ற செய்தி வானரர் பிலம் புகுவதற்குமுன் நிகழ்ந்த்தாகக் கூறும்வான்மீகம். 10 வானரர் பெண்ணையாற்றை அடைதல் 4604. | 'வேறும் எய்துவார் உளர் கொலாம்' எனா, தேறி, இன் துயில் செலவு தீர்ந்துளார், வீறு செஞ் சுடர்க் கடவுள் வேலைவாய் நாற, நாள்மலர்ப் பெண்ணை நாடுவார். |
வேறும் -இவ் வசுரனையல்லாமல் வேறு சிலரும்;எய்துவார் உளர்கொல் ஆம் எனா -இங்கு போருக்கு வரக் கூடியவர் இருக்கி றார்களோ என்று கருதி;இன்துயில் செலவு தீர்ந்துள்ளார் -(தமது) இனிய தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து (அவ்வாறு வருபவர்களைச் சிறிதுநேரம் எதிர்நோக்கின் பின்பு);தேறி -இனி எவரும் வாரார் எனத் தெளிந்து;வீறு செஞ்சுடர்க் கடவுள் -பெருமை மிக்க சிவந்த கதிர்களையுடைய சூரியன்; வேலை வாய் நாற -கிழக்குக் கடலிடத்துத் தோன்ற;நாள் மலர்ப் பெண்ணை -புதிதாய் மலர்ந்த மலர்கள் நிறைந்த பெண்ணையாற்றை; நாடுவார் -நோக்கிச் சென்றனர். வானரவீரர் 'இன்னும் இவன்போன்ற அசுரர் வேறு யாரேனும் போருக்கு வரக் கூடும்' என்று கருதித் தூங்காமல் விழித்திருந்து எதிர்பார்த்த பின்பு, சூரியன் உதிக்கும் வேளையில் சீதையைத் தேடுமாறு அங்கிருந்து புறப்பட்டுப் பெண்ணையாற்றை அடைந்தனர். வேறும் - எச்சவும்மை. வீறு : பிறர்க்கு இல்லாத தனிப் பொலிவு. நாறுதல் :தோன்றுதல். 11 4605. | புன் நை வெம் முலைப் புளினம், ஏய் தடத்து உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய், வண்ண வெண் நகைத் தரள வாள் முகப் பெண்ணை நண்ணினார் - பெண்ணை நாடுவார். |
பெண்ணை நாடுவார் -சீதையைத் தேடிச் சென்ற அவ்வானர வீரர்கள்;புள் நை -சக்கரவாகப் பறவைகள் (ஒப்பாகாமல்) வருந்துவதற்குக் காரணமான;புளின வெம்முலை -மணற்குன்றுகளாகிய விரும்பத்தக்க |