தெருவின் ஆர்ப்புறும் -வீதிகளில் ஆரவாரிக்கின்ற;பல் இயம் -பல வகை இசைக் கருவிகளின் ஒலிகளை;தேர் மயில் -கேட்டுணர்ந்த மயில்கள் (அந்த முழக்கத்தை);கருவி மா மழை என்று -மழைக்கு முதற்காரணமாகிய மேகத்தின் இடியென்ற மயங்கி;களிப்பு உறா -மகிழ்ச்சியடையமாட்டா; அன்னமும் -(அங்குள்ள) அன்னப் பறவைகளும்;பொருநர் தண்ணுமைக்கு -கூத்தர் முழக்கும் மத்தள வோசை கேட்டு (அதை மேகத்தின் இடியென்று மயங்கி);போகலா -(அதற்கு அஞ்சி) விலகிச் செல்லமாட்டா;மருவினார்க்கு -எப்போதும் கலந்து பழகுகின்றவர்களுக்கு;மயக்கும் உண்டாம் கொலோ - மன மயக்கம் உண்டாகுமோ? (உண்டாகாது). மேகத்தின் இடியோசைகேட்டு மகிழ்ச்சியடைதல் மயில்களுக்கும், அஞ்சுதல் அன்னப் பறவைகளுக்கும் இயல்பு. ஆனால், எப்பொழுதும் அத் தொண்டை நாட்டு வீதிகளில் விழா நடப்பதால் பலவகை வாத்திய ஓசைகளைக் கேட்டுப் பழகிய மயில்களுக்கு அந்த ஆரவாரவொலி மகிழ்ச்சியை உண்டாக்குவதில்லை; அங்குள்ள அன்னப் பறவைகளும் அவ்வாத்திய ஒலி கேட்டு அஞ்சி அகல்வதில்லை; இதனால் பழக்கமே அவற்றிற்குத் துணிவைத் தந்தது என்பது. பொருநர்: கூத்தாடுவோர். போர்க்களம் பாடுவோர், ஏர்க்களம் பாடுவோரென இரு வகையினர். பல் இயம்: தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி எனப் பலவகைப்படும். வேற்றுப் பொருள் வைப்பணி. 42 4636. | தேரை வென்று உயர் தெங்க இளம் பாளையை நாரை என்று இளங் கெண்டை நடுங்குவ; தாரை வன் தலைத் தண் இள ஆம்பலைச் சேரை என்று, புலம்புவ, தேரையே. |
தேரை வென்று உயர் -தேர்போல உயர்ந்த (விரிந்த) தலையை யுடைய;தெங்கு இளம் பாளையை -தென்னை மரத்தின் இளமையான பாளையை(க் கண்டு);இளங் கெண்டை -கெண்டை மீன் குஞ்சுகள்; நாரை என்று நடுங்குவ -(அது தங்களைக் கொத்தித் தின்ன வரும்) நாரையென்று நினைத்து அஞ்சி நடுங்கும்;தாரை வன் தலை -கூர் மையான வலிய நுனியுள்ள;தண் இள ஆம்பலை -அரும்பைக் கொண்ட குளிர்ந்த இளைய அல்லித் தண்டைக் கண்டு; தேரை -தேரை கள்(தவளைகள்);சேரை என்று-(அவை நம்மை விழுங்க வரும்) சாரைப் பாம்பென்று நினைத்து; புலம்புவ -(அஞ்சி) வாய்விட்டு அலறும். ஏ: ஈற்றசை. விரியாத தென்னம்பாளைகள் நாரைகளையும், அரும்புகளையுடைய செவ்வல்லித் தண்டுகள் சாரைப் பாம்புகளையும் வடிவத்தால் ஒக்கும்: தென்னம் பாளையை இளங்கெண்டை மீன்கள் நாரையாகவும், செவ்வல்லித் தண்டினைத் தேரைகள் சாரைப் பாம்புகளாகவும் எண்ணி அஞ்சிப் புலம்பியதாகக் கூறியது மயக்கவணி. சேரை என்பது சாரை என வழங்கும். தாரை: கூர்நுனி (தார்க் குச்சி என்ற தொடரில் கூர்மை என்ற பொருளில் வருவது காண்க). 43 |