பக்கம் எண் :

ஆறு செல் படலம் 645

 செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து,
இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார்.

     பொரு இலர் -ஒப்பு இல்லாதவராகிய வானரவீரர்;அன்ன -அத்
தன்மையான வளங்களையுடைய;தண்டக நாடு கடந்து -சிறந்த தொண்டை
நாட்டைத் தாண்டிச் சென்று;அகன் பொன்னி நாடு -அகன்ற காவிரிநதி
பாயும் சோழநாட்டை;எய்தினர் -சேர்ந்தவர்களாய்;செந்நெலும் கரும்பும்
கமுகும் செறிந்து -
செந்நெற் பயிர்களும் கரும்புகளும் பாக்குமரங்களும்
எங்கும் நெருங்கி;இன்னல் செய்யும் நெறி -இயங்குவதற்குத் தடையாக
நின்று துன்புறுத்தும் வழிகளில்;அரிது ஏகுவார் -சிரமப்பட்டுச்
செல்பவரானார்கள்.

     தொண்டை நாட்டுக்குத் தண்டகநாடு என்பதும் ஒரு பெயர்.  காஞ்சிப்
புராணத்தில் பல இடங்களில் இப்பெயர் ஆளப்படுவதை வை.மு.கோ. எடுத்துக்
காட்டியுள்ளார்.  காவிரிநதி பாயும் வளத்தால் சோழநாடு முழுதும்
செந்நெற்பயிரும் கரும்பும் பாக்கு மரங்களும் எங்கும் நெருங்கி, வருவார்
போவாரின் வழியடைத்துத் தடைசெய்து துன்புறுத்தும்என்பது.         46

4640.கொடிறு தாங்கிய வாய்க் குழு நாரை வாழ்
தடறு தாங்கிய கூன் இளந் தாழையின்
மிடறு தாங்கும் விருப்புடைத் தீம் கனி
இடறுவார்; நறுந் தேனின் இழுக்குவார்.

     (வானர வீரர்) கொடிறு தாங்கிய -கீழ்த் தாடை பொருந்திய;வாய் -
அலகாகிய வாயினையுடைய;குழுநாரை -கூட்டமான நாரைகள்;வாழ் தடறு
-
வசிக்கும் நீர்க்கரைகளில்;தாங்கிய -முளைத்து வளர்ந்துள்ள;கூன் இளந்
தாழையின் -
வளைந்த இளமையான தென்னை மரத்தின்;மிடறு தாங்கும் -
கழுத்துப் பக்கம் சுமந்து கொண்டிருக்கின்ற;விருப்பு உடைத் தீம் கனி -
(உண்பவர்க்கு) விருப்பத்தையுண்டாக்குகின்ற பழுத்துக் கீழே உதிர்ந்து
கிடக்கும் சுவையான தெங்கம் பழங்களால்;இடறுவார் -கால் இடறித் தடுக்கி
விழுவார்கள்;நறுந்தேனின் -(அங்குப் பாயும்) சுவையான தேன்
பெருக்கினால்;இழுக்குவோர் -வழுக்கிவிழுவார்கள்.

     வானரவீரர் சோழ நாட்டிற் செல்லும்போது இடைவழியிலே முற்றிக் கீழே
வீழ்ந்துள்ள தேங்காய்களினால் காலிடறியும், தேன் பெருக்கால் வழுக்கியும்
வருந்திச் சென்றார்கள் என்பது.  இச் செய்யுள், தென்னைமர மிகுதியையும்,
தேன் மிகுதியையும் விளக்குவது. வீறுகோளணி. தாழை -தென்னை.      47

4641.குழுவும் மீன் வளர் குட்டம்எனக் கொளா,
எழுவு பாடல் இமிழ் கருப்பு ஏந்திரத்து
ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ் முறை
முழுகி, நீர்க் கருங் காக்கை முளைக்குமே.