கூறினால்;உரை ஒக்குமோ -அந்தச் சொல் பொருந்துமோ? (பொருந்தாது). பாண்டி நாடானது முத்துக்களையும், முத்தமிழாகிய மூவகையமிழ்தத்தையும் தருவதால் ஒருவகையமிழ்தத்தை மட்டுமே கொடுக்கின்ற தேவலோகத்தைப் பாண்டி நாட்டிற்கு ஒப்பாகுமென்று சொல்லுதல் சிறிதும் ஒவ்வாது என்பது. ஏதுவணி. பாண்டியநாடு முத்துக் குளிக்கும் கடல்துறையைக் கொண்டுள்ளமையாலும், தமிழ்ச் சங்கங்களைப் பெற்றிருப்பதாலும் 'முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்' என்றார். 52 4646. | என்ற தென் தமிழ் நாட்டினை எங்கணும் சென்று நாடித் திரிந்து, திருந்தினார், பொன்றுவாரின் பொருந்தினர் போயினார் - துன்று அல் ஓதியைக் கண்டிலர், துன்பினார். * |
என்ற -மேற்கண்டவாறு சிறப்பித்துக் கூறப்பட்ட;தென் தமிழ் நாட்டினை -பாண்டிய நாட்டை;திருந்தினார் -ஒழுக்கத்தால் சிறந்து விளங்கிய அந்த வானர வீரர்கள்;எங்கணும் திரிந்து சென்று நாடி - எல்லாவிடங்களிலும் அலைந்து தேடிப் பார்த்து;துன்று அல் ஓதியை - அடர்ந்த இருள் போன்ற கூந்தலையுடைய சீதையை;கண்டிலர் - காணாதவர்களாய்;பொன்றுவாரில் -இறக்கும் நிலையில் உள்ளவர் போல; துன்பினார் பொருந்தினர் -மிகத் துன்பமடைந்தவர்களாய்;போயினார் - செல்லலானார்கள். பாண்டிய நாட்டிற அப்பால் தேடிப் பார்க்கத் தேசம் எதுவுமில்லாமல் கடலேயிருத்தலால், சீதையைத் தேடும் ஊக்கம் குறைந்து வானர வீரர் உயிரற்றவர் போலச் செயலற்றுச் சென்றார்கள் என்பது. அல் ஓதி: உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஓதி: பெண்ணின் கூந்தல். 53 4647. | வன் திசைக் களிறு அன்ன மயேந்திரக் குன்று இசைத்தது வல்லையில் கூடினார் - தென் திசைக் கடற் சீகர மாருதம் நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார். |
தென் திசைக் கடல் -(வானர வீரர்கள்) தெற்குத் திசையிலுள்ள கடலின்;சீகர மாருதம் -நீர்த் திவலைகளோடு கூடிய காற்று;நின்று இசைக்கும் -இடைவிடாது வீசுகின்ற;நெடு நெறி -(அந்தப் பாண்டிய நாட்டின்) பெருவழிகளை;நீங்கினார் -கடந்தவர்களாய். இசைத்தது - (பலராலும்) சிறப்பித்துக் கூறப்படுவதான;வன் திசைக் களிறு அன்ன - வலிய தென் திசையைத் தாங்கும் யானை போல;மயேந்திரக் குன்று - மயேந்திர மலையை;வல்லையில் கூடினார் -விரைவில் போய்ச் சேர்ந்தார்கள். |