எடுத்து -வெண்மையான அலைகளாகிய கைகளை மேலே எடுத்து;உழைத் தடங்கண்ணி -மான்போன்ற அகன்ற கண்களையுடைய சீதை;இலங்கையாள் -இலங்கையில் இருக்கிறாள்;என்று உரைத்திட்டு -என்று சொல்லி;ஊழின் வந்து அழைப்பதே கடுக்கும் -முறையாக எதிரே வந்து (வானரர்களாகிய தம்மை) அழைப்பதையே ஒத்துள்ள;அவ்ஆழி -அந்தத் தென்கடலை; நோக்கினார் -(அவர்கள்) கண்டார்கள். கடல் ஆரவாரம் செய்வது - சீதை இலங்கையில் இருக்கிறாள் என்று உரக்கக் கூறுவது போலவும், கடலலைகள் வீசியெறிதல் - வானரர்களுக்குக் குறிப்புக் காட்டுவது போலவும், கடலலை கரையில் செல்வது - அந்த வானரர்களை இங்கே வாருங்களென்று எதிர்சென்று கைகளைத் தூக்கி யழைப்பது போலவும் இருந்ததென்பது. தன்மைத் தற்குறிப்பேற்றவணி. இலங்கையாள்: பெண்பால் குறிப்புமுற்று. உழைக் கண்ணி: உவமைத் தொகை (உழை போன்ற கண்ணி) அலைகளை நீர் நிலைகளின் கைகளாக உவமிப்பது கவிமரபு. மான் கண்களை மகளிர் கண்களுக்கு உவமிப்பது அவை கருமையும் பெருமையும் மருண்ட தன்மையும் கொண்டுள்ளமையால்என்பது. 1 ஏமகூடத்தில் பிரிந்த யாவரும் மயேந்திரத்தில் ஒன்று கூடுதல் 4649. | 'விரிந்து, நீர், எண் திசை மேவி, நாடினீர், பொருந்துதிர் மயேந்திரத்து' என்று போக்கிய அருந் துணைக் கவிகள் ஆம் அளவு இல்சேனையும் பெருந் திரைக் கடல் எனப் பெரிது கூடிற்றே. * |
நீர் -நீங்கள்;விரிந்து -பரவி;எண்திசை மேவி -எட்டுத் திக்கு களுக்கும் சென்று;நாடினீர் -(சீதையைத்) தேடியவர்களாய்;மயேந் திரத்துப் பொருந்துதிர் -மகேந்திர மலையில் (எங்களோடு) வந்து கூடுங்கள்;என்று - என்று கூறி;போக்கிய -(அங்கதன் முதலோர்) முன்பு அனுப்பிய; அருந்துணை -அரிய துணையாக வந்த;கவிகள் ஆம் அளவு இல் சேனையும் -எண்ணிக்கையற்ற வானர சேனையும்;பெருந்திரைக் கடல் என -பெரிய அலைகளையுடைய மற்றொரு கட லைப் போல;பெரிதும் கூடிற்று -(அங்கதன் முதலான வானர வீரரிடம்) பெருங் கூட்டமாக வந்து சேர்ந்தது. அனுமன் முதலிய வானரத் தலைவருடன் சுக்கிரீவனால் அனுப்பப்பட்டவர் இரண்டு வெள்ளம் கொண்டு பெருஞ்சேனையர் என்பது. 2 |