பக்கம் எண் :

சம்பாதிப் படலம் 677

4694.'வாழ்வித்தீர் எனை; - மைந்தர்! - வந்து, நீர்
ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய்;
கேள்வித் தீவினை கீறினீர்; இருள்
போழ்வித்தீர்; உரை பொய்யின் நீங்கினீர்.

     கேள்வித் தீவினை கீறினீர் -சான்றோரிடம் கேட்டறிந்ததால் பாவச்
செயலையொழித்தவர்களும்;இருள் போழ்வித்தீர் -அஞ்ஞானமாகிய
இருட்டையழித்தவர்களும்;பொய் உரையின் நீங்கினீர் -பொய்
பேசுவதிலிருந்து நீங்கினவர்களுமாகிய;மைந்தர் -வீரர்களே!  நீர் வந்து -
நீங்கள் நானிருக்குமிடம் வந்து;எனை வாழ்வித்தீர் -என்னை
நல்வாழ்வடைச் செய்தீர்கள்;துன்ப ஆழிவாய் ஆழ்வித்தீர் அலிர் -(என்
தம்பியின் மரணச் செய்தி கூறி அதனால் என்னைத்) துயர்க் கடலினுள் மூழ்கச்
செய்யவில்லை;

     நல்லறியுடையவர்களும், பொய்யில்லாதவர்களும், அஞ்ஞானத்தை
அழித்தவர்களுமாகி இங்கு வந்த நீங்கள் இராமகாரியத்திற்காக என் தம்பி
உயிர் துறந்ததைத் தெரிவித்ததால், தம்பியின் மரணத்தை என்னிடம்
கூறியதற்காக வருந்த வேண்டா; அவன் இவ்வாறு பேறு பெற்றதை நினைத்து
எனக்கு மகிழ்ச்சியேயாயிற்று என்று கூறினான் சம்பாதி என்பது கருத்து.
கதிரவனின் வெப்பம் தாக்குதலால் தன் சிறகுகள் கரிந்தொழிய, சம்பாதி
மகேந்திர மலையில் விழுந்து, அங்கு வசித்த நிசாகர முனிவரைச் சரணடைய
அவர் தமது தவச் சிறப்பால் எதிர்கால வரலாற்றையுணர்ந்து, 'பின்னர்
இராமதூதர்களான வானரர் இராம நாமத்தை உச்சரிக்கும் பொழுது உனக்கு
முன்பு போலச் சிறகுகள் முளைத்திடும்' என்று தனக்கு வரமளித்ததை
நினைந்து இறகு முளைக்குங்காலம் தனக்குக் குறுகியது பற்றி 'எனை
வாழ்வித்தீர்' என்றும், 'இருள் போழ்வித்தீர்' என்றும் சம்பாதி மகிழ்ச்சியோடு
கூறினான் எனலாம்.

     இருள் போழ்வித்தீர் -தெளிவுபற்றிய கால வழுவமைதி. கீறுதல்: பிளந்து
தீயன நீக்குதல். போழ்தல்: பிளந்து அப்புறப்படுத்துதல்.         47

4695.'எல்லீரும் அவ் இராம நாமமே
சொல்லீர்; சொல்ல, எனக்கு ஓர் சோர்வு இலா
நல் ஈரப் பயன் நண்ணும்; - நல்ல சொல்
வல்லீர்! வாய்மை வளர்க்கும் மாண்பினீர்!'

     நல்ல சொல் வல்லீர் -(மேலும், சம்பாதி அந்த வானர வீரர்களை
நோக்கி) இன்சொல் கூறுகின்றவரும்;வாய்மை வளர்க்கும் மாண்பினீர் -
சத்தியத்தை வளர்க்கும் பெருமை பெற்றவர்களுமாகிய வானர வீரர்களே!
எல்லீரும் -
நீங்கள் அனைவரும்;அவ்இராம நாமமே சொல்லீர் -அந்த
'இராம' என்னும் திருநாமத்தையே வாயால் உச்சரிப்பீர்களாக!சொல்ல -
(அவ்வாறு என்னருகில்) சொல்வதனால்;எனக்கு -எனக்கு;ஒர் சோர்வு
இலா -
ஒரு சிறிதும் தாழ்வில்லாத;நல் ஈரப் பயன் -நல்ல (அந்த
இராமனின்) அருளாகிய பயன்;நண்ணும் -கைகூடும்.