பக்கம் எண் :

678கிட்கிந்தா காண்டம்

     'என்றான்' என்று அடுத்த செய்யுளோடு தொடர்ந்து முடியும்.  இராம
நாமம் ஓதியதால் சம்பாதியின் சிறகு முளைத்தது என்னும் செய்தி.  கம்பர்
படைப்பு; வான்மீகத்தில் இல்லை.                                 48

இராம நாமம் கேட்டுச் சம்பாதியின் சிறை வளர்தல்

4696.என்றான், 'அன்னது காண்டும் யாம்' எனா,
நின்றார் நின்றுழி, நீல மேனியான்
நன்று ஆம் நாமம் நவின்று நல்கினார்,
வன் தோளான் சிறை வானம் தாயவே.

     என்றான் -என்று (சம்பாதி) கூறினான் (அதுகேட்ட வானரர்கள்);யான்
அன்னது காண்டும் எனா -
நாங்கள் அதைக் காண்போம் என்று சொல்லி;
நின்றார் நின்றுழி -
நின்றவர் நின்றபடியே;நீலமேனியான் -
நீலமேனியையுடைய இராமனது;நன்கு ஆம் நாமம் - நன்மையை அருளும்
'இராம' என்னும் திருநாமத்தை;நவின்று நல்கினார் -உச்சரித்துதவினார்கள்
(அதனால்);வன் தோளான் சிறை -வலிய தோள்களையுடைய சம்பாதியின்
சிறகுகள்;வானம் தாய -வானளாவித்தாவி வளர்ந்தன.

     'ஏ' : ஈற்றசை.

     இராம கைங்கரியத்தில் துணைபுரிய வேண்டுமென்ற கருத்தினாலேயே
சம்பாதிக்கு வெந்த சிறகை முளைத்திட அப்போதே முனிவர் அருள்
புரியவில்லை யென்பதும், இந்த வானர வீரரோடு பேச்சு நிகழ்கையில்தான்
அந்தச் சம்பாதியின் சிறகு முளைத்தது என்பதும் வான்மீகத்தால் பெறப்படும்.
நீலமேனியான் நன்றாம் நாமம்: திருமாலின் ஆயிர நாமங்களுள் சிறந்ததான
'இராம நாமம்' என்பதும் பொருந்தும்.                             49

4697.சிறை பெற்றான், திகழ்கின்ற மேனியான்,
முறை பெற்று ஆம் உலகு எங்கும் மூடினான் -
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள்
உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான்.

     ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள் -புகையோடு கூடிய நெருப்பைக்
கக்கும் வாளானது;உறை பெற்றால் எனல் ஆம் -ஓர் உறையைப் பெற்றது
என்று சொல்லத் தக்க;உறுப்பினான் -அலகினைப் பெற்றவனாகிய சம்பாதி;
திகழ்கின்ற மேனியான் -
விளங்கும் உடம்பையுடையவனாய்;முறை பெற்று
ஆம் -
வரிசையாகப் பொருந்தி;உலகு எங்கும் மூடினான் -உலகங்கள்
எல்லாவற்றிலும் பரவித் தன் சிறகுகளால் மூடியவனாய்;நிறை பெற்று -
வலிமை பெற்று;சிறை பெற்றான் -(தனது கரிந்துபோன) சிறகுகள்
(முன்போல) வளரப் பெற்றான்.