கதிரவனின் சாரதியாகிய அருணனுக்கு மக்களாகப் பிறந்த சம்பாதி சடாயு என்ற நாங்கள் வானத்தில் உயரப் பறக்கும் இயல்புடைய கழுகுகளுக் கெல்லாம் அரசராக விருந்தோம் என்று சம்பாதி கூறினான் என்பது. அருணன்: சூரியனுக்குச் சாரதி; காசியப முனிவன் மனைவியான விநதையின் வயிற்றில் பிறந்தவன்; கருடனுக்குத் தமையன்; இடைக்குக் கீழே உறுப்பில்லாதவன். இச்செய்யுள் முதல் 4706 ஆம் செய்யுள் முடிய உள்ள ஏழு பாடல்களை ஐந்து சீர் கொண்டவையாகப் பிரித்துக் கலித்துறை என்றும் கொள்வர். நண்பீர்: ஈர் - முன்னிலைப் பன்மை விகுதி. 53 4701. | ' ''ஆய் உயர் உம்பர் நாடு காண்டும்'' என்று அறிவு தள்ள, மீ உயர் விசும்பினூடு மேக்கு உறச் செல்லும் வேலை, காய் கதிர்க் கடவுள் தேரைக் கண்ணுற்றேம்; கண்ணுறாமுன், தீயையும் தீக்கும் தெய்வச் செங் கதிர்ச் செல்வன் சீறி, |
ஆய்உயர் உம்பர் நாடு -(நாங்கள் இருவரும்) வானத்திலுள்ள அந்தத் தேவலோகத்தை;காண்டும் என்று அறிவு தள்ள -சென்று காண வேண்டுமென்று எங்கள் அறிவுதூண்ட;மீ உயர் விசும்பின் ஊடு -மேலே உயர்ந்து விளங்கும் ஆகாய வழியே;மேக்கு உறச் செல்லும் வேலை - மேலே மிக உயர்ந்து பறந்து (நாங்கள்) சென்ற போது;காய் கதிர்க் கடவுள் -எரிக்கும் கதிர்களையுடைய சூரிய தேவனது;தேரைக் கண்ணுற்றேம் - தேரினைக் கண்களால் கண்டோம்;கண்ணுறாமுன் -அவ்வாறுநாங்கள் பார்ப்பதற்குள்;தீயையும் தீக்கும் -நெருப்பையும் எரித்து அழிக்கவல்ல; தெய்வச் செங்கதிர்ச் செல்வன் -தெய்வத் தன்மையுள்ள சிவந்த கதிர்களையுடைய அந்தக் கடவுள்;சீறி -கோபங் கொண்டு. நாங்கள் இருவரும் மிக உயரப் பறக்கும் வல்லமை பெற்றிருந்தமையால் வானுலகத்தைக் காணவேண்டுமென்ற பேரார்வத்தால் வானத்தில் பறந்து சூரிய மண்டலத்தைக் குறுகிச் சூரியனைக் காணவிருக்கும்போது, பூலோகத்திலிருந்து நாங்கள் வந்ததால் அக்கடவுள் எங்களைக் கோபித்தான் என்று சம்பாதி கூறினான் என்பது. தீயையும் தீக்கும் தெய்வச் செங்கதிர்ச் செல்வன்: வெம்மையின் மிகுதியை விளக்கும் உயர்வு நவிற்சியணி. அகரச்சுட்டு யகர மெய்பெற்று 'ஆயுயர்' (ஆய்உயர்) என்று வந்தது. மீயுயர்: (மீ உயர்) ஒரு பொருட்பன்மொழி. தீயையும்: உம்மை உயர்வு சிறப்பு. தேர்: ஒற்றைச் சக்கரத் தேர். (கதிரவன் தேருக்குச் சக்கரம் ஒன்று, குதிரைகள் ஏழு என்பது புராண மரபு) 54 |