பக்கம் எண் :

மயேந்திரப் படலம் 683

     மண்ணிடை விழுந்த என்னை -அவ்வாறு தரையில் விழுந்த என்னை;
வானிடை வயங்கு வள்ளல் -
வானத்தில் விளங்குகின்ற கதிரவன்;
கண்ணிடை நோக்கி -
கண்களால் பார்த்து;உற்ற கருணையான் -என்மீது
கொண்ட இரக்கத்தால்;சனகன் காதல் பெண் -சனகனின் அன்பு மகளான
சீதை;இடையீட்டின் வந்த -(இராமனைவிட்டுப்) பிரிதலால் அவளைத்
தேடிக் காண்பதற்காக வரும்;வானரர் -வாரர வீரர்கள்;இராமன் பேரை -
இராமபிரான் திருநாமத்தை;எண்ணிடை உற்ற காலத்து -மனத்தினாற் கருதி
உச்சரிக்குங் காலத்தில்;இறகு பெற்று எழுதி -நீ உன் இறகுகளை மீண்டும்
பெற்றுப் பறந்து செல்வாய்;என்றான் -என்று அருள்புரிந்தான்.

     தன் வெம்மையான கதிர்களால் சிறகுகள் தீய்ந்து கீழே விழுந்துவிட்ட
என்னைக் கண்டு, கதிரவன் இரக்கப்பட்டு 'இராமன் மனைவியான சீதையைத்
தேடுவதற்காக வானர வீரர்கள் இங்கு வந்து உன் வேண்டுகோளுக்கிணங்க
இராம நாமத்தையுச்சரிக்க, அப்போது இழந்த சிறகுகள் மீண்டும் தளிர்க்கப்
பெற்று ஏழுவாய்' என்று அருள் புரிந்தான் எனச் சம்பாதி கூறினான்.

     மண்ணிடை, வானிடை, கண்ணிடை: இவற்றில் இடையென்பது இடம்
என்னும் பொருளது.

     தனக்கு அருள் புரிந்ததை முன்னிட்டுக் கதிரவனை 'வள்ளல்' என்று
குறித்தான்.  இடையீடு -  பிரிவு.                                 56

4704.'எம்பியும் இடரின் வீழ்வான்,
      ஏயது மறுக்க அஞ்சி,
அம்பரத்து இயங்கும் யாணர்க்
      கழுகினுக்கு அரசன் ஆனான்;
நம்பிமீர்! ஈது என் தன்மை?
      நீர் இவண் அடைந்தவாற்றை,
உம்பரும் உவக்கத் தக்கீர்!
     உணர்த்துமின், உணர' என்றான்.

     உம்பரும் உவக்கத் தக்கீர் -தேவர்களும் மகிழத்தக்க
தொழிலையுடையவர்களாகிய;நம்பிமீர் -சிறந்த வானர வீரர்களே!இடரின்
வீழ்வான் -
(என் துன்பத்தைக் கண்டு) துயரத்தில் மூழ்கியவனாகிய;
எம்பியும்-என் தம்பியான சடாயுவும்;ஏயது மறுக்க அஞ்சி -(நான்)
ஏவியதைமறுக்க அஞ்சியவனாய்;அம்பரத்து இயங்கும் -வானத்தில்
சஞ்சரிக்கின்ற;யாணர்க் கழுகினுக்கு -வலிய கழுகுகளுக்கு;அரசன்
ஆனான் -
அரசன்ஆயினான்;ஈது என் தன்மை -இதுவே எனது
வரலாறு;நீர் இவண்அடைந்த ஆற்றை -நீங்கள் இங்கு வந்த வரலாற்றை;
உணர உணர்த்துமின்-(நான்) உணரும்படி கூறுக;என்றான் -என்று
கூறிமுடித்தான்.

     யாணர்: அழகு (புதுமை). இங்கு 'வலிமை' என்று பொருள்படும்.    57