நான்முகத்து ஒருவன் -(நான்கு திசைகளையும் நோக்க) நான்கு முகங்களைக் கொண்ட பிரமதேவன்;மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் - மற்றொரு மூர்த்தியான பார்வதியை இடப்பாகத்திற் கொண்ட சிவன்;பால்முகப் பரவை -பாலைத் தன்னிடங் கொண்டுள்ள திருப்பாற் கடலில்;பள்ளிப் பரம்பரன் பணி என்றாலும் -பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டுள்ள சிறந்த திருமால் ஆகியோரின் பொருட்டுச் செய்யும் வேலையை யாயினும்; காலனுக்கேயும் -(அவ்வளவு ஏன்) யமனுங் கூட;சேறல் அரிது -(அந்தப் பணியை நிறைவேற்றிட) உள்ளே புகுந்து செல்லுதல் என்பது முடியாததாகும்; இது காவல் தன்மை -(ஏனெனில்) இது (இலங்கையின்) கட்டுக் காவல் தன்மையாகும்;விளிவு இல் நாளீர் -அழிவில்லாத நீண்ட ஆயுட் காலத்தையுடையவர்களே!மேல் உமக்கு உறுவது -இனிமேல், உங்களுக்கு நேரக் கூடியவற்றை;எண்ணிச் செல்லுமின் -முன்னரே ஆராய்ந்து பார்த்துச் செல்லுங்கள். மும்மூர்த்திகளின் பொருட்டுச் செய்யும் பணியாக இருப்பினும் அதனைச் செய்து முடிப்பதற்காக இலங்கைக்குள் புகுவது இயமனுக்குக் கூட முடியாது. ஆகவே, இது பற்றி முன்னரே ஆராய்ந்து முடிவெடுத்துத் தக்கவாறு செய்யுங்கள் என்றான் சம்பாதி. 61 4709. | 'எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று, அவ்இலங்கை மூதூர்; வல்லீரேல் ஒருவர் ஏகி, மறைந்து அவண் ஒழுகி, வாய்மை சொல்லீரே துயரை நீக்கித் தோகையைத் தெருட்டி, மீள்திர்; அல்லீரேன், என் சொல் தேறி, உணர்த்துமின் அழகற்கு அம்மா! |
அவ் இலங்கை மூதூர் -பழமையான அந்த இலங்கைக்கு;எல்லீரும் - நீங்கள் எல்லோரும்;சேறல் என்பது -(ஒருமிக்கப்) போய்ச் சேர்வது என்பது;எளிது அன்று -எளிய செயலில்லை;வல்லீரேல்- (ஆனால்) திறமைமிக்கவராக இருந்தால்;ஒருவர் ஏகி -(உங்களுக்குள்) வல்லமையுடைய ஒருவர் மட்டும் (தனித்துச்) சென்று;அவண் மறைந்து ஒழுகி - (அங்குள்ளவர்கள் அறியமுடியாதபடி) அங்கே மறைந்து (சீதையைத் தேடும்) செயல்புரிந்து;வாய்மை சொல்லீரே -இராமன் கூறிய உண்மை மொழிகளைச் சொல்லியவர்களாய்;தோகையைத் தெருட்டித் துயரை நீக்கி -சீதைக்குத் தெளிவூட்டித் துன்பத்தைப் போக்கி;மீள்திர் -திரும்புங்கள்;அல்லீரேல் - இல்லாவிட்டால் (உங்களில் ஒருவர் போகவில்லையென்றால்);என் சொல் தேறி -நான் கூறிய வார்த்தையில் நம்பிக்கை வைத்து;அழகற்கு உணர்த்துமின் -அழகுள்ள அந்த இராமபிரானிடம் (சீதை இலங்கையில் இருப்பதைத்) தெரிவியுங்கள். |