பக்கம் எண் :

688கிட்கிந்தா காண்டம்

16.  மயேந்திரப் படலம்

     மயேந்திர மலையை அடைந்த வானரவீரர்களின் செயல்களை விளக்கிக்
கூறும் படலாமாகும்.

     கடலைக் கடப்போர் யாரென வானரர் தமக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
நீலன், அங்கதன், சாம்பன் முதலியோர் தம் இயலாமையைக் கூறுகின்றார்கள்;
அவ்வமயம் 'அனுமனே தக்கவன்' எனச் சாம்பவன் உரைக்கிறான்; அந்த
அனுமனது வீரத்தைச் சாம்பன் புகழ்ந்துரைக்கிறான்; அனுமன் இலங்கை
செல்ல உடன்படுகிறான்.  பின்னர், மயேந்திர மலையின் உச்சிக்குச்
செல்லுகிறான்; கடலைத் தாவிச் செல்ல அனுமன் பெருவடிவு கொள்கிறான்.

கடலைக் கடப்போர் யாரென
வானரர் தமக்குள் பேசிக் கொள்ளுதல்

கலித்துறை

4711.'பொய் உரைசெய்யான், புள்அரசு'
      என்றே புகலுற்றார்,
'கை உறை நெல்லித் தன்மையின்
      எல்லாம் கரை கண்டாம்;
உய் உரை பெற்றாம்; நல்லவை
      எல்லாம் உற எண்ணிச்
செய்யுமின் ஒன்றோ, செய்
      வகை நொய்தின் செய வல்லீர்!

     புள் அரசு -கழுகுகளுக்கு அரசனான சம்பாதி;பொய் உரை
செய்யான் என்றே -
பொய் சொல்லமாட்டான் என்று உறுதியாக நினைத்து;
புகலுற்றார் -
சொல்லத் தொடங்கியவர்களாகி;செய்வகை நொய்தின்
செயவல்லீர்!
- செய்ய வேண்டியவற்றை எளிதாகச் செய்து முடிக்க
வல்லவர்களே!கை உறை நெல்லத் தன்மையின் -உள்ளங் கையில்
பொருந்திய நெல்லிக் கனியின் தன்மை போல;எல்லாம் கரை கண்டாம் -
(சீதை இருக்குமிடம் முதலிய செய்திகள்) முழுவதையும் நன்றாக அறிந்தோம்
(ஆகவே);உய் உரை பெற்றாம் -(அச் சம்பாதியால்) நாம் வாழ்வதற்குரிய
உறுதிமொழிகளையும் அடைந்தோம்;(ஆகவே) நல்லவை எல்லாம் -
நன்மை தரக்கூடிய எல்லாவற்றையும்;உற எண்ணி -தக்கவாறு ஆராய்ந்து;
ஒன்று செய்யுமின் -
(இரண்டில் ஏதேனும்) ஒன்றைச் செய்யுங்கள்.