பக்கம் எண் :

மயேந்திரப் படலம் 689

     சம்பாதி கூறியவை உண்மையேயாதலால் அவனது சொற்படி ஏதேனும்
ஒன்றைச் செய்தலே நன்மையாகும்; நாம் சென்று தேடாமலே சம்பாதி
சொன்னதை நம்பி மீண்டும் இராமசுக்கிரீவரையடைந்து சீதை
இலங்கையிலிருந்து முதலியவற்றை எடுத்துச் சொன்னாலும் நமது கடமை
முடிவுபெறும்.  இனி, நாம் கடலைக் கடந்து இலங்கை புகுந்து சீதையைக்
கண்ணிலே கண்டு வந்து செய்தி தெரிவிக்கலாமென்றால் அது முன்கூறிய
அதனைக் காட்டிலும் சிறந்ததேயாம்; ஆனால், அவ்வாறு செய்யக் கடலைக்
கடக்கவேண்டுமே! அப்படிக் கடலைக் கடந்து சென்று மீளும்
வல்லமையுள்ளவர் யாவர் என்று வானரவீரர் ஆராந்தனர் என்பது.  கையுறை
நெல்லிக்கனி: மேல் தோற்றத்தைக் கொண்டு உள் விவரம், முழுவதையும்
தெளிவாக அறிவதில் உவமம். நெல்லியின் உருவம், கொட்டை, வரைகள்,
சதைப் பற்று முதலியன தெளிவாய்த் தோற்றுவிப்பன.  சீதையைப் பற்றிய
செய்தி எதுவும் தமக்குத் தெரியாமையாலும், தவணை கடந்தமையாலும், இனி
மீண்டு சென்று அரசனது கோபத்திற்கு இலக்காவதைவிட உயிரை விடுதலே
நல்லது' என்று தாம் இறப்பதற்குத் துணிந்த நிலையில், எதிரேவந்து சம்பாதி
தெளிவுண்டாக்கியதால் 'உய்யுரை பெற்றாம்' என்றார்.

     புள்ளரசு பொதுவாகக் கருடாழ்வானைக் குறிப்பது: இங்கே கழுகரசன்
என்னும் பொருளது.                                             1

4712.'சூரியன் வெற்றிக் காதலனோடும்
      சுடர் விற் கை
ஆரியனைச் சென்றே தொழுது,
     உற்றது அறைகிற்பின்,
சீர் நிலை முற்றும்; தேறுதல்
      கொற்றச் செயல் அம்மா;
வாரி கடப்போர் யாவர்?' என
      தம் வலி சொல்வார்;     *

     சூரியன் -கதிரவனின்;வெற்றிக் காதலனோடு்ம் -வெற்றியோடு
விளங்கும் மைந்தனான சுக்கிரீவனோடும்; சுடர் விற்கை ஆரியனை -
ஒளிபொருந்திய வில்லைக் கையிற் கொண்டவனான சிறந்த இராமனையும்;
சென்று தொழுது -
(பணியை முடிக்காமல்) போய் வணங்கி;உற்றது
அறைகிற்பின் -
நிகழ்ந்த செய்திகளைச் செல்வோமானால்; சீர்நிலை முற்றும்
-
சிறந்த (நமது) கடமை ஒருவாறு முடிவுபெறும்; (ஆயினும்) தேறுதல் -
(நாமே கடல் கடந்து சீதையுள்ள இடத்தைக் கண்டு) தெளிவது;கொற்றச்
செயல் -
வீரச் செயலாகும்; (ஆதலால்)வாரி கடப்போர் யாவர் -கடலைக்
கடக்கின்ற வல்லமையுள்ளவர் நம்மிலே யார் உள்ளார்;என -என்று சொல்லி;
தம் வலி சொல்வார் -
தத்தம் வலிமையை எடுத்துக் கூறலானார்கள்.

     சீதையை நேரிலே கண்டு மீண்டு செய்தி தெரிவித்தலே சிறந்த
தென்பதைக் குறிக்கும்.

     வாரி: கடல்; அம்மா : வியப்பிடைச் சொல். ஆரியன்:
பெருமைக்குரியவன். இராமபிரானை ஆரியன் என்று குறிப்பது இந்நூலில்
பெருவழக்காகும்.                                                2