ஆரியன் முன்னர் -(முதலில்) இராமபிரானின் எதிரே சென்று; போதுற உற்ற அதனானும் - (இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும்) நட்புச் செய்வித்த தன்மையாலும்; காரியம் எண்ணி - (தான்) மேற்கொண்ட செயலை ஆராய்ந்து; சோர்வு அற முற்றும் - சிறிதும் சோர்வில்லாமல் முடிக்கும்; கடனானும் - கடமையைக் கைக் கொண்டமையாலும்; மாருதி ஒப்பார் வேறு இலை என்னா - மாருதியையொப்பவர் வேறெ ஒருவருமில்லை என்று சொல்லி; சீரியன் மல்தோள் - சிறந்தவனான அந்த அனுமனது மற்போருக்கு உரிய தோள்களின்; ஆண்மை தெரிப்பான் - வலிமையைத் தெரிவிக்கும் பொருட்டு; இவை செப்பும் - இவ்வாறான மொழிகளை அனுமனைப் பார்த்து கூறலானான்; அயன் மைந்தன் - பிரமன் புதல்வனான சாம்பவான். தெரித்தல்: தெரியச் சொல்லுதல் இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நட்பைச் செய்தவனும், தான் மேற்கொண்ட செயலை ஆராய்ந்து சோர்வில்லாமல் முடிக்கவல்லவனுமாகிய அனுமனையொப்பவர் வேறு யாருமில்லையென்றார். 8 சாம்பவான் அனுமனது வீரத்தைப் புகழ்தல் 4719. | 'மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகை நாளிர்; நூலை நயந்து, நுண்ணிது உணர்ந்தீர் நுவல் தக்கீர்; காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர்; கடன் நின்றீர்; ஆலம் நுகர்ந்தான் ஆம் என வெம் போர் அடர்கிற்பீர்; |
மேலை விரிஞ்சன் - (சாம்பவான் அனுமனை நோக்கி) யாவரினும் மேம்பட்டவனான பிரமதேவன்; வீயினும் - இறந்து போனாலும்; வீயா - அழியாத; மிகை நாளீர் - மிகுதியான நீண்ட வாழ்நாள்களையுடையவரே! நூலை நயந்து - எல்லாக்கலைகளையும் விரும்பி; நுண்ணிது உணர்ந்தீர் - நுட்பமாக ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்கள்; நுவல் தக்கீர் - (செய்திகளை) எடுத்துக் கூறத்தக்க சொல்வன்மையுடையவரே; காலனும் அஞ்சும் - யமனும் கண்டு அஞ்சத் தக்க; காய்சின மொய்ம்பீர் - கடுங்கோபத்துடன் கூடிய வலிமையுடையவரே! கடன் நின்றீர் - உமது கடமையில் தவறாது உறுதியுடன் நின்றவராவீர்; ஆலம் நுகர்ந்தான் ஆம் என - ஆலகாலம் என்னும் நஞ்சையுண்ட சிவபிரான்போல; வெம்போர் அடர்கிற்பீர் - கடும்போர் செய்து (யாரையும்) அழிக்கவல்லீர். முனிவர் சாபத்தால் தனது வல்லமையையுணராது தயங்கி நிற்கும் அனுமனைச் சாம்பவான் கடல் கடக்குமாறு கூறுதற்பொருட்டுத் துதிக்கின்றான் என்பது. முதலடி அனுமனின் சிரஞ்சீவித் தன்மையையும் இரண்டாமடி பெருங்கல்வியால் அவன் சொல்வன்மை பெற்றிருப்பதையும், பின்னிரண்டடிகள் மேற்கொண்ட |