பக்கம் எண் :

696கிட்கிந்தா காண்டம்

4721.'நல்லவும் ஒன்றோ, தீயவும்
      நாடி நவை தீரச்
சொல்லவும் வல்லீர்; காரியம்
      நீரே துணிவுற்றீர்;
வெல்லவும் வல்லீர்; மீளவும்
     வல்லீர்; மிடல் உண்டே;
கொல்லவும் வல்லீர்; தோள்
      வலி என்றும் குறையாதீர்;

     நல்லவும் ஒன்றோ - நல்லவை மட்டுமோ? தீயவும் நாடி -
தீயவற்றையும் ஆராய்ந்து பார்த்து; நவை தீரச் சொல்லவும் வல்லீர் - குற்றம்
நீங்குமாறு உண்மையை யெடுத்துக் கூறுவதிலும் வல்லமை உடையீர்; காரியம்
நீரே துணிவுற்றீர்
- செய்யத்தக்க செயல் எது என்பதை நீரே ஆராய்ந்து
துணிந்து செய்யும் திறமுடையவராவீர்; வெல்லவும் வல்லீர் - (அரக்கரை)
வெல்வதற்கும் வல்லமையுடையீர்; மீளவும் வல்லீர் - (இலங்கையிலிருந்து)
இங்கே திரும்பி வரவும் வல்லவராவீர்; மிடல் உண்டே - (அங்கே)
பகைவர்கள் வலிமையோடு எதிர்த்துப் போர் புரிவார்களே; கொல்லவும்
வல்லீர்
- அப் பகைவர்களைக் கொல்லும் திறமுடையவருமாவீர்! தோள் வலி
என்றும் குறையாதீர்
- அதனால் உம் தோள்வலியில் எப்போதும்
குறைவடையமாட்டீர்.

     நல்லனமட்டுமன்றித் தீயவற்றையும் நாடி, குற்றம் தீரும்வரையில் தீர்வு
கூறும் திறம் அனுமனிடம் உண்டு என்பது சாம்பவான் கருத்து. 'மறிந்து
உருளப் போர் வாலியை வெல்லும் மதிவல்லீர்' (4723) என இத்திறத்தினைப்
பின்வரும் பாடல் உணர்த்துவதை இங்கு இணைத்து நோக்குக. எந்தச்
செயலைப் பற்றி ஆராயவேண்டுமானாலும் அதிலுள்ள நன்மையையும்
தீமையையும் ஆராய்ந்து குற்றமில்லாது அச் செயல் முடிவுறத் தக்க
வழிகளைச் சொல்ல வல்லவன் அனுமன் என்பதைச் சாம்பவான் கூறினான்
என்பது. மிடல்: வலிமை.

     அனுமனிடம் ஒரு சிறந்த அமைச்சனுக்கு உரியனவும், சிறந்த போர்
வீரனுக்கு உரியனவுமான அரிய திறன்கள் அமைந்துள்ளமை காட்டப்
பெற்றுள்ளது.                                                 11

4722.'மேரு கிரிக்கும் மீது உற
      நிற்கும் பெரு மெய்யீர்;
மாரி துளிக்கும் தாரை
      இடுக்கும், வர வல்லீர்;
பாரை எடுக்கும்நோன்மை வலத்தீர்;
      பழி அற்றீர்;
சூரியனைச் சென்று, ஒண்
      கையகத்தும் தொட வல்லீர்;