குறைவு இத்தன்மையது என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு தனக்கு ஏற்பட்டது என்பதும் அனுமன் கருத்து. 23 4734. | 'முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான், முழங்கி முந்நீர், உற்றதே எனினும், அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும், இற்றை நும் அருளும், எம்கோன் ஏவலும் இரண்டுபாலும் கற்றை வார் சிறைகள் ஆக, கலுழனின்கடப்பல் காண்டீர்! |
நீர் முற்றும் உலகம் முற்றும் -கடலாற் சூழப்பெற்ற உலக முழுவதையும்;விழுங்குவான் -விழுங்கும்பொருட்டு;முழங்கி -முழக்க மிட்டுக் கொண்டு;முந்நீர் உற்றதே எனினும் -கடலானது எதிரிட்டுப் பொங்கிவந்தாலும்;அண்டம் உடைந்துபோய் -இந்த அண்டகோளமே உடைந்துபோய்;உயர்ந்ததேனும் -உயர்ந்த வானத்திற் சென்றாலும் (சிறிதும் கலக்கமில்லாமல்);இற்றை நும் அருளும் -இப்பொழுது உங்களுடைய நல்லாசியும்;எம்கோன் ஏவலும் -எம் தலைவனான இராமபிரான் எனக்கிட்ட கட்டளையும்;இரண்டு பாலும் -இரண்டு பக்கங்களிலும்;கற்றை வார்சிறைகள் ஆக -தொகுதியாக நீண்ட சிறகுகளாய் அமைய;கலுழனின் - (நான்) கருடனைப் போல;கடப்பல் -(இக்கடலைக்) கடந்து செல்வேன்; காண்டீர் -(நீங்கள் இதைக்) காண்பீர்கள். கடலானது இந்த உலகத்தையழிக்குமாறு பொங்கி வந்தாலும், இந்த அண்டம் உடைந்து வானத்திற் சென்றாலும் நான் சிறிதும் பின்வாங்காமல் உங்களுடைய ஆசியால் இராமனது கட்டளைப்படியே கடல் கடந்து சென்று சீதையைக் கண்டு செய்தியறிந்து மீண்டு வருவேன் என்பது. கருடனுக்குப் பறந்து செல்ல இரு சிறகுகள் இன்றியமையாத உறுப்பாவது போல, நான் கடல் கடப்பதற்கும் உமது அருளும், இராமனது ஏவலுமே இன்றியமையாதனவாயிருந்து மேற்கொண்ட செயலை முற்றுவிக்கும் என்பது பின்னிரண்டடிகளின் கருத்து. உவமையணி. சிறிய திருவடி என்னும் அனுமன், பெரிய திருவடியென்னும் கருடனுக்கு ஒப்பான ஒற்றுமை தோன்றக் கூறப்பெற்ற நயம் காணத்தக்கது. கடப்பல்: தன்மையொருமை எதிர்கால வினை முற்று. 24 அனுமன் மயேந்திர மலையின் உச்சிக்குச் செல்லுதல் 4735. | 'ஈண்டு இனிது உறைமின், யானே எறி கடல் இலங்கை எய்தி, மீண்டு இவண் வருதல்காறும்; விடை தம்மின், விரைவின்' என்னா |
|