பக்கம் எண் :

706கிட்கிந்தா காண்டம்

 ஆண்டு அவர் உவந்து வாழ்த்த,
      அலர் மழை அமரர் தூவ,
சேண் தொடர் சிமயத் தெய்வ
      மயேந்திரத்து உம்பர்ச் சென்றான்.

     யான் -நான்;எறி கடல் இலங்கை எய்தி -அலைவீசும் கடலால்
சூழப் பெற்ற இலங்கை நகரையடைந்து;மீண்டு இவண் வருதல் காறும் -
இங்கே திரும்பி வருகின்ற வரையிலும்;ஈண்டு  இனிது உறைமின் -(நீங்கள்)
இந்த இடத்தில் தங்கியிருங்கள்;விரைவின் விடை தம்மின் -(எனக்கு
விரைவிலே விடை கொடுங்கள்;என்னா -என்று சொல்லி; (அனுமன்);
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த -
அப்பொழுது அந்த வானர வீரர்கள்
மகிழ்ந்து வாழ்த்துக் கூறவும்;அமரர் அலர் மழை தூவ -தேவர்கள் பூமாரி
பொழியவும்;சேண் தொடர் சிமயத் தெய்வ மயேந்திரத்து -
வானத்தையளாவிய சிகரங்களையுடைய தெய்வத் தன்மையுள்ள
மகேந்திரமலையினது;உம்பர்ச் சென்றான் -உச்சிக்குப் போய்ச் சேர்ந்தான்.

     உறைமின், தம்மின்: முன்னிலைப் பன்மை வினை முற்றுக்கள்.     25

அனுமன் பெரு வடிவு கொள்ளல்

4736.பொரு அரு வேலை தாவும்
     புந்தியான், புவனம் தாய
பெரு வடிவு உயர்ந்த மாயோன்
      மேக்கு உறப் பெயர்ந்த தாள்போல்
உரு அறி வடிவின்
      உம்பர் ஓங்கினன்; உவமையாலும்
திருவடி என்னும் தன்மை
      யாவர்க்கும் தெரிய நின்றான்.

     பொரு அரு -ஒப்புக்கூறமுடியாத;வேலை தாவும் புந்தியான் -
கடலைக் கடக்க வேண்டுமென்ற உறுதி கொண்ட அனுமன்;புவனம் தாய -
உலகங்களைத் திரிவிக்கிரமனாய்த் தாவியளந்த;பெரு வடிவு உயர்ந்த
மாயோன் -
பெரிய உருவத்தால் உயர்ந்து விளங்கிய திருமாலினுடைய;
மேக்கு உறப் பெயர்ந்த தாள் போல -
மேலிடத்தில் பொருந்து மாறு
உயரவெடுத்த திருவடிபோல;உரு அறி வடிவின் -(தனது) உருவத்தை
யாவரும் அறியக் கூடிய பெரு வடிவத்தோடு;உம்பர் ஓங்கினன் -
வானத்தையளாவ வளர்ந்தான் (அதனால்);உவமையாலும் -
உவமைவகையாலும்;திருவடி என்னும் தன்மை -திருவடியென்கின்ற தனது
திருநாமத்தின் தன்மை;யாவர்க்கும் தெரிய நின்றான் -யாவர்க்கும்
விளங்கும் படி தோன்றி நின்றான்.