வானத்தையளப்பதற்காக உயரவெடுத்த திரிவிக்கிரம அவதாரத்தின் திருவடிபோல, அனுமன் வானத்தையளாவுமாறு பெருவடிவங கொண்டானென்பது. இராமாவதாரத்தில் திருமாலுக்கு ஊர்தியாயிருந்து உதவியது பற்றிவந்த அனுமனது திருவடியென்ற பெயர்க்கு, இங்குத் திரிவிக்கிரமனது திருவடிபோல வளர்ந்தமையால் அப் பெயருண்டாயிற்று என்ற கருத்துப்படக் கூறியது. பிரிநிலை நவிற்சியணி. 26 4737. | பார் நிழல் பரப்பும்பொன் தேர் வெயில் கதிர்ப் பரிதி மைந்தன் போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்கு, தார் நிழல் பரப்பும் தோளான், தடங் கடல் தாவா முன்னம், நீர் நிழல் உவரி தாவி இலங்கைமேல் செல்ல, நின்றான். |
தார் நிழல் பரப்பும் தோளான் -மாலைகள் நிழல் பரப்பும் தோள் களையுடைய அனுமன்;நிழல் பார் பரப்பும் பொன்தேர் -தனது ஒளியை உலகெங்கும் பரப்புகின்ற அழகான தேரையும்;வெயில் கதிர் -வெப்பமான கதிர்களையுமுடைய;பரிதி மைந்தன் -சிறந்த கதிரவன்;போர் நிழல் பரப்பும் -போரில் தமது வலிமையை வெளிப்படுத்துகின்ற;மேலோர் புகழ் என -மாவீரரின் புகழ் (உலகமெங்கும் பரவுவது) போல;உலகம் புக்கு - உலக முழுவதும் சுற்றி (ஒளி செய்து);தடங்கடல் தாவா முன்னம் -பெரிய மேற்குக் கடலிற் சென்று சேருவதற்குமுன்பே;நீர்நிழல் உவரி தாவி - நீர்மயமான அழகிய இக்கடலைக் கடந்து;இலங்கைமேல் செல்ல -இலங்கை நகருக்குச் சென்று சேரும்படி;நின்றான் -(மகேந்திரமலையில்) ஆயத்தமாக நின்றான். அனுமன் சூரியன் மறைவதற்குள் இலங்கையிற் சென்று சேரவேண்டுமென்ற கருத்தோடு மகேந்திர மலையின் உச்சியிலேறிப் பேருருவங் கொண்டு சித்தமாக நின்றான் என்பது. சூரியன் தன் கதிர்களால் உலகமுழுவதும் ஒளி செய்வதற்குப் பெருவீரர்புகழ் உலகமெங்கும் பரவுதலை உவமை கூறினார். உலகம் புக்குத் தாவா முன்னம் செல்ல நின்றான் என இயையும், 27 4738. | பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க, உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி, ஊழின் நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான்; மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான். |
|