பக்கம் எண் :

708கிட்கிந்தா காண்டம்

     பகு வாய மடங்கல் வைகும் -திறந்த வாயையுடைய ஆண்சிங்கங்கள்
வாழ்கின்ற;படர் வரை முழுதும் -பரந்துள்ள அந்த மகேந்திர மலை
முழுவதும்;மூழ்க -(அனுமனது பாரம் அழுத்துதலால்) கீழேயழுந்தவும்;
ஊழின் நெகு வாய -
வரிசையாகத் தோன்றும் சிதைந்த இடங்களையுடைய;
சிகர கோடி -
அந்த மலையின் சிகரங்கள் பலவும்;நெரிவன தெரிய -
நெரிந்து பொடியாக;விடம் உகுவாய கொள் நாகத்து ஒத்த -நஞ்சைக்
கக்குகின்ற வாயையுடைய பாம்பினைப் போன்ற;வால் சுற்றி -வாலினால்
(தன்னுடம்பைச் சுற்றிக் கொண்டு);நின்றான் -(பேருருவத்தோடு)
நின்றவனாகிய அனுமன்;மக ஆமை முதுகில் தோன்றும் -திருமாலாகிய
பெரிய ஆமை முதுகின்மேல் விளங்கித் தோன்றிய;மந்தரம் எனலும்
ஆனான் -
மந்தரமலை என்று சொல்லத்தக்கவனுமானான்.

     அனுமன் உடற்சுமையால் தரையில் அழுந்துகின்ற மகேந்திரமலை -
கூர்மாவதார ஆமைக்கும் மகேந்திரமலையில் நின்ற அனுமன் - பெரிய
கூர்மத்தால் தாங்கப்பெற்ற மந்தரமலைக்கும், அனுமனது உடலைச் சுற்றிய
அவனது வால் - மந்தர மலையைச் சுற்றிய வாசுகிக்கும் ஒப்பாயின என்றார்.
                                                           28

4739.மின் நெடுங் கொண்டல் தாளின்
      வீக்கிய கழலின் ஆர்ப்ப,
தன் நெடுந் தோற்றம் வானோர்
      கட்புலத்து எல்லை தாவ,
வல் நெடுஞ் சிகர கோடி
      மயேந்திரம், அண்டம் தாங்கும்
பொன் நெடுந் தூணின் பாத
      சிலை என, பொலிந்து நின்றான்.

     மின் நெடுங் கொண்டல் -மின்னலோடு கூடிய பெரிய மேகங்கள்;
தாளின் வீக்கிய -
(தன்) காலில் கட்டப்பெற்ற;கழலின் ஆர்ப்ப -வீரக்
கழல்போல ஒலிக்கவும்;தன் நெடுந்தோற்றம் -நீண்டுயர்ந்த தனது பெரிய
உருவமானது;வானோர் கட்புலத்து எல்லை தாவ -தேவர்களின்
கண்பார்வையாகிய எல்லையைத் தாண்டிச் செல்லவும்;வல் நெடுஞ் சிகர
கோடி -
வலிய பெரிய சிகரங்களின் தொகுதியையுடைய;மகேந்திரம் -
மகேந்திர மலையானது;அண்டம் தாங்கும் பொன் நெடுந் தூணின் -இந்த
அண்டகோளத்தைத் தாங்கி நிற்கும் பொன்மயமான பெரிய தூணின்;பாத
சிலை என -
அடியிலிட்ட கல்லைப் போல விளங்கவும்;பொலிந்து
நின்றான்-
(அந்த மகேந்திர மலையின் மேல் பேருருவத்துடன்) (அனுமன்)
நிமிர்ந்துநின்றான்.

     அனுமன் உலகைத் தாங்கும் தூண்போல நின்றான் என்பதும், அவன்
நின்ற மலை அத் தூணின் அடியிலிட்ட கல்லைப்போல விளங்கிற்று என்பதும்
விளங்கும்.

     தற்குறிப்பேற்றவணி.