பக்கம் எண் :

பொழில் இறுத்த படலம்473

                6. பொழில் இறுத்தபடலம்                    

     பிராட்டியி்டம்சூடாமணியுடன் விடைபெற்றுக் கொண்ட அனுமன்,
மேற்கொண்டு செய்த செயல்களைக் கூறுவது இந்தப் பகுதி.

      இதனுள், விடைபெற்ற அனுமன் மனநிலை அவன் அசோகவனத்தை
அழித்தல், பிராட்டியிருந்த மரம் மட்டும் அழியாது திகழ்தல், வனத்தை
அழித்து நின்ற அனுமன் நிலை, அனுமனைக் கண்டு அஞ்சிய அரக்கியர்
பிராட்டியை வினாவுதல், பிராட்டியின் பதில், காவலர் இராவணனிடம் சென்று
செய்தி கூறுதல், அனுமன் ஆரவாரம் செய்தல் முதலிய செய்திகள்
அடங்கியுள்ளன.

அனுமன் மன நிலை

கலிவிருத்தம்

5429.நெறிக்கொடு வடக்கு உறும் நினைப்பினில்
                            நிமிர்ந்தான்,
பொறிக் குல மலர்ப் பொழிலிடைக் கடிது போவான்,
‘சிறித்தொழில் முடித்து அகல்தல் தீது’ எனல்,
                            தெரிந்தான்;
மறித்தும் ஓர்செயற்கு உரிய காரியம் மதித்தான்.

     ெ்நறிக் கொடு -(அனுமன்இனித் தான் செல்ல வேண்டிய) வழியைக்
கருதி; வடக்கு உறும் - வடக்கு முகமாகச் செல்லும்; நினைப்பினில் -
நினைப்போடு; நிமிர்ந்தான் - அதற்கு ஏற்பப் பெரியவடிவத்தை எடுத்துக்
கொண்டு; பொறிக்குல மலர்ப்பொழில் இடை - வண்டுக்கூட்டங்கள்
மொய்க்கும் மலர்கள் நிறைந்த அசோகவனத்திடையே; கடிது போவான் -
விரைந்து செல்பவனாகிய அனுமன்; சிறு தொழில் முடித்து அகல்தல் -
(பிராட்டியைக் கண்ட இந்த) சிறு செயலை மட்டும் முடித்துக் கொண்டு
போவது; தீது எனல் தெரிந்தான் - (தன் ஆற்றலுக்குக்) குறைவு என்று
உணர்ந்து; மறித்தும் செயற்கு உரிய ஓர் காரியம் மதித்தான் - மீண்டும்
தான் செய்வதற்குப் பொருப்பான ஒரு செயலைச் செய்ய எண்ணினான்.