வஞ்சனை அரக்கனை- கபடத்தன்மை பொருந்திய அரக்கனாகிய இராவணனை; நெடு வாலால் - எனது நெடிய வாலினால்; அஞ்சினுடன் அஞ்சு தலை தோள் உற - பத்துத் தலைகளும் இருபது தோள்களும் ஒன்று சேரும் படி; நெருக்கி அடைத்து - நெருக்கிக் கட்டி; வெம் சிறையில்வைத்தும் இலென் - கொடிய சிறைக்காவலில் வைத்தேனும் அல்லேன்; வென்றும் இலென் - போரில் அவனை வென்றேனும் அல்லேன்; என்றால் - என்று சொல்லுவமானால்; ஒருவர்க்கு ஒருவர் தஞ்சம் என்றல் - ஒருவருக்கு ஒருவர் பற்றுக்கோடு என்ற உறுதிமொழி கூறல்; தகும் அன்றோ- தகுதி உடையதாகுமல்லவோ (தகுதி உடையதாகாது என்றபடி). தஞ்சம்ஒருவர்க்கு ஒருவர் என்றது. இராமபிரானும் சுக்கிரீவனும் உற்ற துணையாக நட்புக் கொண்டதைக் குறிப்பது. தன் அரசனான சுக்கிரீவனுக்கு உள்ள பொறுப்பை அனுமன் தன்மேல் ஏற்றிக் கொண்டதாகும். அசைத்தல் - கட்டுதல். (3) 5432. | ‘கண்டநிருதக் கடல் கலக்கினென், வலத்தின் திண் திறல்அரக்கனும் இருக்க ஓர் திறத்தின் மண்டவுதரத்தவள்மலர்க் குழல் பிடித்து, கொண்டு சிறைவைத்திடுதலில் குறையும் உண்டோ ? |
வலத்தால் -என்வலிமையினால்; கண்டநிருதக்கடல் - கண்ணுக்குத் தெரிகின்ற அரக்கர் கூட்டத்தை; கலக்கினென் - கலங்கச் செய்தவனாய்; திண்திறல் அரக்கனும் இருக்க - மிக்க வலிமை உடைய அரக்கனாகிய இராவணனும் பார்த்துக் கொண்டிருக்க; ஓர் திறத்தின் - ஒப்பற்ற எனது ஆற்றலினால்; மண்ட உதரத்தவள் மலர்க்குழல் பிடித்து - (அவனது பட்டத்து அரசியான) மண்டோதரியின் மலரணிந்த கூந்தலைப் பற்றி; சிறைகொண்டு வைத்திடுதலில் - சிறையாகக் கொண்டு வைப்பதில்; கு றையும்உண்டோ - குறைவு உள்ளதோ ? (இல்லை என்றபடி) இராவணனைச்சிறைவைத்தலை விட அவன் மனைவியைச் சிறையில் அடைத்தலே நிறைவானதாக இருக்கும் எனக் கருதுகின்றான், |