பக்கம் எண் :

506சுந்தர காண்டம்

படுகுவவுத்திண் தோள்குரங்கு - மலைபடுத்துப் போகும்படியான திரண்ட
வலிய தோள்களை உடைய ஒரு குரங்கு; இடை கிழித்து வீச  -
சோலையினிடையில் புகுந்து மரங்களை ஒடித்து வீசுதலினால்; கடிகா எரிபடு
துகிலின் நொய்தின் இற்றது -
காவல் மிக்க அச்சோலை நெருப்புப்பட்ட
ஆடை போல, விரைவில் அழிந்தது; என்றார் - என்று கூறினர்.

     ‘கிழித்து வீச’என்ற தொடர், மரங்களை ஒடித்தலும், மண்டபம் முதலிய
கட்டிடங்களை இடித்தலும் அனுமனுக்கு எளிய செயல் என்பதைப்
புலப்படுத்துகிறது. ‘நெருப்பில்பட்ட துகில்’ - விரைவில் அழிவதற்கு உவமை.
கடிகா - காவல் சோலை.                                    (56)

5485.

‘சொல்லிடஎளியது அன்றால்; சோலையை, காலின்,
                                  கையின்,
புல்லொடு துகளும்இன்றி, பொடிபட நூறி,
                                  பொன்னால்
வில் இடுவேரம்தன்னை வேரொடு வாங்கி வீச,
சில் இடம்ஒழிய, தெய்வ இலங்கையும் சிதைந்தது’
                                 என்றார்.

     சொல்லிட எளியதுஅன்று - (அப்பருவத் தேவர்கள் மீண்டும்
இராவணனிடம் அந்தக் குரங்கு செய்த அழிவும் ஆற்றலும் எங்களால்)
சொல்லுவதற்கு எளியன அல்ல; சோலையை - அந்த அசோகவனத்தை;
காலின் கையின் புல்லொடு துகளும் இன்றிப் பொடிபட நூறி - தன்
கால்களாலும் கைகளாலும் புற்களும் அவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும்
தூசியும் இல்லாதபடி பொடியாகும்படி அழித்து; பொன்னால் வில்லிடு
வேரந்தன்னை வேரொடும் வாங்கி வீச -
பொன்னால் ஒளி வீசும் (வேள்வி
மண்டபமான) சயித்தத்தை அடியோடு எளிதி்ல் பிடுங்கி வீசி எறிய; சில் இடம்
ஒழிய -
ஒரு சிறு இடமே நீங்கலாக; தெய்வ இலங்கையும் சிதைந்தது
என்றார் -
தெய்வத் தன்மையுடைய இலங்கை நகரமும் (பெரும் பாலும்)
அழிந்துவிட்டது என்று கூறினர்.

     சில் இடம்,பிராட்டி இருந்த சிறு இடத்தைக் குறித்தது. இலங்கை,
தெய்வக் கம்மியனான விசுவ கன்மாவால் அமை்க்கப்பட்டதாகலின் தெய்வ
இலங்கை எனப் பட்டது. வேரம் - சயித்தம்                      (57)