7. கிங்கரர்வதைப் படலம் அனுமன், கிங்கரர்என்னும் அரக்க வீரர்களைக் கொன்ற செய்தியைக் கூறுவது, இந்தப் பகுதி. கிங்கரர் - ஏவலாளர். இராவணனால் அனுமன் மேல் ஏவப்பட்டவர். அனுமன் பிடித்துவருமாறு கிங்கரரை இராவணன் ஏவுதல் 5489. | அரு வரைமுழையில் முட்டும் அசனியின் இடிப்பும், ஆழி வெருவரு முழக்கும்,ஈசன் வில் இறும் ஒலியும், என்ன, குரு மணி மகுடகோடி முடித் தலை குலுங்கும் வண்ணம், இருபதுசெவியினூடும் நுழைந்தது, அவ் எழுந்த ஓசை. |
அருவரை முழையின்முட்டும் அசனியின் இடிப்பும் - பெரிய மலையின் குகையிலே போய்த் தாக்கும் இடியின் முழக்கமும்; ஆழி வெருவரு முழக்கும் - (பிரளயகாலத்தில்) அச்சம் உண்டாகுமாறு தோன்றுகின்ற கடலின் ஒலியும்; ஈசன் வில் இறும் ஒலியும் என்ன - சிவனது வில்லை (இராமபிரான்)ஒடித்த போது ஏற்பட்ட ஒலியும், என்று சொல்லும்படி; குரு மணி மகுடகோடி முடித்தலை குலுங்கும் வண்ணம் - ஒளி பொருந்திய இரத்தினங்கள்பதிக்கப்பெற்ற கிரீடங்களை வரிசையாக அணிந்த மயிர் முடியை உடையபத்துத் தலைகளும் அசையும்படி; எழுந்த அவ் ஓசை - எங்கும் பரந்தெழுந்த அந்தப் பேரோசை; இருபது செவியினூடும் நுழைந்தது - இராவணன் இருபது காதுகளின் வழியே உட் புகுந்து சென்றது. அனுமன்ஆர்ப்பின் பெருமை இங்குக் கூறப் பெற்றது. அனுமனது பேரொலிக்கு, இடியின் முழக்கம், இராமபிரான் ஒடித்த சிவதனுசின் ஒலி, ஊழிக்காலத்துப் பொங்கும் கடலின் பேரொலி, உவமைகளாயின. (1) |