| பிந்து காலினர்,கையினர், பெரும் பயம் பிடரின் உந்த, ஆயிரம்பிணக் குவைமேல் விழுந்து உளைவார். |
வந்த கிங்கரர்- அனுமனுடன் போரிட வந்த கிங்கரர்களான அரக்கர்கள்; ‘ஏ’ எனும் மாத்திரை மடிந்தார் - இரண்டு மாத்திரைக்கால அளவில் இறந்தார்கள்; நந்தவானத்து நாயகர் ஓடினர் - (உடனே) நந்தவனத்துப் பாதுகாவலர் விரைந்து செல்பவராய்; நடுங்கி, பிந்து காலினர் கையினர் - நடுங்கிப் பின் வாங்குகின்ற கால் கை உடையவர்களாய்; பெரும் பயம் பிடரின் உந்த - மிக்க அச்சம் கழுத்தைப் பிடித்துத்தள்ள; ஆயிரம் பிணக்குவை மேல் விழுந்து - ஆயிரக்கணக்கான பிணக்குவியலின் மேல் விழுந்து; உளைவார் - வருந்துவார். (55) 5544. | விரைவின்உற்றனர்; விம்மலுற்று யாது ஒன்றும் விளம்பார்; கரதலத்தினால்,பட்டதும், கட்டுரைக்கின்றார்; தரையில்நிற்கிலர்; திசைதொறும் நோக்கினர்; சலிப்பார்; அரசன், மற்றவர்அலக்கணே உரைத்திட, அறிந்தான். |
விரைவின்உற்றனர் - இராவணன் முன்னேவிரைவாகப் போய்ச் சேர்ந்த அவர்கள்; விம்மல் உற்று - ஏங்கிய வண்ணமாய்; யாது ஒன்றும் விளம் பார் - யாதொன்றையும் (வாயினால்) சொல்ல மாட்டாமல்; பட்டதும் - அங்கு நேர்ந்த எல்லாவற்றையும்; கரதலத்தினால் கட்டுரைக் கின்றார் - தங்கள் கைகளின் சைகைகளால் குறிப்பித்துக் காட்டி; தரையில் நிற்கிலர் - தரையில் நிற்க மாட்டாமல்; திசை தொறும் நோக்கினர் சலிப்பார் - நான்கு திக்குகளையும் பார்த்து நடுங்கினார்கள்; அரசன் அவர் அலக்கணே உரைத்திட அறிந்தான் - அரக்கர் அரசனான இராவணன், அவர்கள் படுகின்ற வருத்தமே (அங்கு நேர்ந்த படுதோல்வியைத்) தெரிவிக்க உணர்ந்தான். கரதலத்தினால்கட்டுரைக் கின்றார் என்றது. அங்கு நடந்த அக்கிங்கரர் அழிவைச் சொல்ல அச்சத்தால் நாவெழாததைக் காட்டுகின்றது. சொல்லாடாமல் மெய்ப்பாடுகளாலேயே செய்தி உணர்த்தும் சாதனையைச் செய்யுளிலும் செய்துகாட்டுகிறார், கவிச்சக்கரவர்த்தி. (56) |