5554. | காற்றினை மருங்கில் கட்டி, கால் வகுத்து, உயிரும் கூட்டி, கூற்றினைஏற்றியன்ன குலப் பரி குழுவ; குன்றின் தூற்றினின்எழுப்பி, ஆண்டு, தொகுத்தென, சுழல் பைங் கண்ண வேற்று இனப்புலிஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம். |
மருங்கில்காற்றினைக் கட்டி - பக்கங்களில் உள்ளகாற்றைப் பிடித்துத் தொகுத்து; கால் வகுத்து - அதற்கு நான்கு கால்களையும் உண்டாக்கி;உயிரும் கூட்டி - உயிரினையும் அதில் சேர்த்து; கூற்றினை ஏற்றி அன்ன -எமனை மேலே ஏற்றியது போன்றுள்ள (வீரரைத் தம்மீது கொண்டுள்ள);குலப்பரி குழுவ - நல்லசாதிக் குதிரைகள் கூட்டமாகத் தொடரவும்; வியந்துஎழும் பதாதி ஈட்டம் - மன மகிழ்ச்சியோடு (போருக்குப்) புறப்படுகின்றகாலாட்களின் கூட்டம்; குன்றின் தூற்றினின் எழுப்பி -மலைப்புதர்களிலிருந்து எழுப்பி; ஆண்டு தொகுத்தென - அந்தப் போர்க்களத்தில் ஒன்றுசேர்த்தனவும்; சுழல் பைங்கண்ண - சுழலுகின்ற பசுமையான கண்களை உடையனவுமான; வேறு இனப்புலி ஏறு என்ன - வெவ்வேறு வகையான ஆண் புலிகள் போலத் தோன்றவும். ‘வயங்க’ எனஅடுத்தக் கவியோடு தொடரும். சம்புமாலியுடன் சென்ற குதிரைப்படை, காலாட்படைகளின் ஆற்றல் உணர்த்தப் பெற்றது. கூற்றினைப்படைத்து, சுற்றியுள்ள காற்றை நான்கு கால்களாக அந்தக் கூற்றுக்கு வகுத்து, உயிரூட்டப்பட்டன போல விளங்கினவான குதிரைகள். இந்தக் குதிரைகள் பகைவர்க்குக் கூற்றாக அமைந்து உயிர் பறிக்கும் என்பது கற்பனை. (5) 5555. | தோமரம்,உலக்கை, கூர் வாள், சுடர் மழு, குலிசம், தோட்டி, தாம் அரம்தின்ற கூர் வேல், தழல் ஒளி வட்டம், சாபம், காமர் தண்டுஎழுக்கள், காந்தும் கப்பணம், கால பாசம், மா மரம்,வலயம், வெங் கோல் முதலிய வயங்க மாதோ; |
|