மகிழ்ச்சியினால்,மதச் செருக்குக் கொள்ளும், என்று சேனைத் தலைவர் கூறினார்கள். (1) 5602. | ‘இலங்கு வெஞ் சினத்து அம் சிறை எறுழ் வலிக் கலுழன் உலங்கின்மேல்உருத்தென்ன, நீ குரங்கின்மேல் உருக்கின் அலங்கல் மாலைநின் புயம் நினைந்து, அல்லும் நன் பகலும் குலுங்கும் வன்துயர் நீங்குமால், வெள்ளியங் குன்றம். |
இலங்கு வெம்சினத்து - விளங்குகின்ற கொடியகோபத்தையும்; அம் சிறை - அழகிய சிறகுகளையும்; எறுழ் வலிக் கலுழன் - மிக்க வலிமையையும் உடைய கருடன்; உலங்கின் மேல் உருத்தென்ன - ஒரு கொசுகின் மேல் கோபித்துப் போர் செய்வது போல; நீ குரங்கின் மேல் உருக்கின் - நீ அற்பக் குரங்கின் மீது போர்ீபுரியச் சென்றால்; அலங்கல் மாலை நின் புயம் நினைந்து - அசைந்தாடும் வெற்றி மாலை அணிந்த நினது தோள் வலிமையை நினைந்து; வெள்ளி அம் குன்றம் - கயிலை மலை; அல்லும் நன் பகலும் குலுங்கும் வன் துயர் நீங்கும் - இரவிலும் நல்ல பகலிலும் அச்சத்தால் நடுங்கும் கொடுந்துன்பம் நீங்கப் பெறும். ‘உன்னால் முன்புபெயர்த்தெடுக்கப்பட்டு எளிமைப் பட்ட கயிலை மலை, நீ, இப்போது அற்பமான ஒரு குரங்கினிடம் போருக்குச் சென்றால், உன்னிடத்துக் கொண்டிருந்த அச்சம் நீங்கும் அல்லவா ! அதனால் எங்களைப் போருக்கு அனுப்புக’ என்றனர் சேனாபதிகள். எறுழ் வலி; ஒரு பொருட் பன் மொழி. உலங்கு - கொசுகு. உரு, உட்குதல், அஞ்சுதல்; உருக்குதல் - எதிராளி அஞ்சும்படி தாக்குதல். (2) 5603. | ‘உறுவது என்கொலோ ? உரன் அழிவு என்பது ஒன்று உடையார் பெறுவது யாதுஒன்றும் காண்கிலர், கேட்கிலர் பெயர்ந்தார்; சிறுமை ஈது ஒப்பதுயாது ? நீ குரங்கின்மேல் செல்லின், முறுவல் பூக்கும்அன்றே, நின்ற மூவர்க்கும் முகங்கள் ? |
|