பக்கம் எண் :

அக்ககுமாரன் வதைப் படலம்653

விடுதியால் - கூத்தாடுதலைவிடுவாய்; எனா - என்று சொல்லி; பூந்தளிர்
கைகளால் -
மலரையும் தளிரையும் போன்ற தனது கைகளால்; மெய் உறப்
புல்லினாள் -
(அரக்கனுடைய) உடலை இறுகத் தழுவிக் கொண்டாள்.

முன் செய்யுளின்கற்பனை மேலும் விரிந்து பேரவல வீரத்தைப்
புலப்படுத்திற்று. (47)

இராவணனிடம்மண்டோதரி முதலியோர் அழுது புலம்புதல்

                                                                                      கலிவிருத்தம்
                                                                                        (வேறுவகை)

5715.

கயல்மகிழ் கண் இணை கலுழி கான்று உக,
புயல் மகிழ் புரிகுழல் பொடி அளாவுற,
அயன் மகன் மகன்மகன் அடியின் வீழ்ந்தனள்,
மயன் மகள்;வயிறு அலைத்து அலறி மாழ்கினாள்.

மயன் மகள் -அசுரசிற்பியாகிய மயனது மகளான மண்டோதரி; கயல்
மகிழ் கண் இணை -
கயல் மீன் போன்று மதர்த்திருக்கும் கண்கள்
இரண்டும்; கலுழி கான்று உக - நீர் பெருகச் சிந்தவும்; புயல் மகிழ்புரி
குழல் பொடி அளாவுற -
காள மேகத்தை ஒத்த முறுக்கிவிட்ட கூந்தல்
மண்ணின் புழுதியிலே புரளவும்; அயன் மகன் மகன் மகன் - பிரமதேவன்
குமாரனான புலத்திய முனிவரின் மகனாகிய விச்ரவஸ் என்பவனது மகனாகிய
இராவணனது; அடியில் வீழ்ந்தனள் - பாதங்களில் விழுந்து; வயிறு
அலைத்து -
வயிற்றில் அடித்துக் கொண்டு; மாழ்கினாள் - கதறிப்
புலம்பினாள்.

மண்டோதரி, தன்குமாரன் அட்சன் (அக்ககுமாரன்)
இறக்கக்காரணமாயிருந்த இராவணனது கால்களில் விழுந்து அழுது
புலம்பினாள். மகளிர், பெரும் துக்கம் வந்த போது, வயிற்றில் அடித்துக்
கொள்ளும் இயல்பினராவர். (48)

5716.

தா அருந்திரு நகர்த் தையலார் முதல்
ஏவரும், இடைவிழுந்து இரங்கி ஏங்கினார்;
காவலன்கால்மிசை விழுந்து, காவல் மாத்
தேவரும் அழுதனர்,களிக்கும் சிந்தையார்.