ஆய - அவ்வாறே(பன்னீராயிரம் என்னும் தொகையினதாய்); மாதானைதான் வந்து அண்மியது அண்ம - குதிரைப்படை தானும் வந்து அங்குக் கூடியது. அவ்வாறு அப்படைகள் பலவும் வந்து கூடவும்; ஆண்மை தீயவாள் நிருதர் வேந்தர் - வீரம் நிறைந்த கொடிய வாள் ஏந்திய அரக்கர் அரசர்கள்; சேர்ந்தவர் சேர - திரண்டு தன் அருகில் வந்து சேரவும்; அருவி சோர் வயிரக்கண்ணான் - அருவிபோல நீர் ஒழுகுகின்ற பகைமை கொண்ட கண்களை உடைய இந்திரசித்து; ‘ஏ’ எனும் அளவில் - விரைவிலே; தேரில் வந்தான் - தேரில் ஏறி வந்து; இராவணன் இருந்த - இராவணன் வசித்திருந்த; யாணர் வாயில் தோய் கோயில் புக்கான் - அழகிய வாயில் பொருந்திய அரண்மனையினுள் புகுந்தான். முன் பாடலில்வேற்படை முதலிய ஐந்தினைக் கூறி, இதனுள் குதிரைப்படை தனித்துக் கூறப்பட்டது. அனைத்துப் படைகளும் தன்னை வந்து நெருங்கியதும், இந்திரசித்து, இராவணனின் அரண்மனைக்குச் சென்றான். யாணர் - அழகு; தோய் - பொருந்திய. (7) 5724. | தாள் இணைவீழ்ந்தான், தம்பிக்கு இரங்குவான்; தறுகணானும் தோள் இணைபற்றி ஏந்தித் தழுவினன், அழுது சோர்ந்தான்; வாள் இணை நெடுங்கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க, மீளிபோல்மொய்ம்பினானும் விலக்கினன்; விளம்பலுற்றான்; |
தாள் இணைவீழ்ந்தான் - (அரண்மனை புகுந்தஇந்திரசித்து) இராவணனது இரு பாதங்களில் விழுந்து; தம்பிக்கு இரங்குவான் - தம்பி அக்ககுமாரன் இறந்தமைக்குத் துயர் கொண்டு புலம்புவானான்; தறுகணானும் - அஞ்சாமை உடைய இராவணனும்; தோள் இணை பற்றி ஏந்தி - இந்திரசித்துவின் இரண்டு தோள்களையும் பிடித்து எடுத்து; தழுவினன் அழுது சோர்ந்தான் - அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு தானும் அழுது வருந்திச் சோர்வுற்றான்; இணைவாள் நெடுங்கண் மாதர் - இருவாள்கள் போன்ற நெடுங்கண்களை உடைய அரக்கர் குல மகளிர்கள்; வயிறு அலைத்து அலறி மாழ்க - வயிற்றில் அடித்துக் |