பக்கம் எண் :

70சுந்தர காண்டம்

     வேண்டியதை அடைந்துவாழும் இடம் சுவர்க்கம் என்பது வேதம்
உடன்பட்ட உண்மை. (அவ்வின்பம்) இலங்கையில் உள்ளது. தேவலோகத்தில்
இல்லை. ஆதலின் இலங்கையினும் அமராவதி உயர்ந்தது என்று கூறுதல்
உண்மையாகாது. அமராவதியில் உள்ளவர்கள் இராவணனுக்கு அடிமைப்பணி
செய்கின்றனர். அவர்கள் வேண்டியவை எட்டாப்பொருள் ஆதலின் அது
துறக்கம் அன்று.                                           (93)

4834.

உட்புலம்எழுநூறு என்பர்
     ஓசனை;உலகம் மூன்றில்
தெட்புறுபொருள்கள் எல்லாம்
     இதனுழைச்செறிந்த என்றால்
நுட்புலம் நுணங்குகேள்வி
     நுழைவினர்எனினும் நோக்கும்
கட்புலம்வரம்பிற் றாமே ?
     காட்சியும்கரையிற் றாமே ?

     உள்புலம் -(இலங்கையின்) அகநகர்ப் பகுதி; எழுநூறு ஓசனை
என்பர் -
எழுநூறு யோசனை என்று கூறுவார்கள்;  மூன்று உலகில் -
மூன்று உலகங்களிலும் (உள்ள ); தெட்பு உறு பொருள்கள் - சிறப்புடைய
பொருள்கள்; எல்லாம் - யாவும்; இதன் உழை செறிந்த என்றால் -
இந்தஇலங்கையில் மிகுந்து உள்ளன என்றால்; நுட்புலம் - நுண்மையான
அறிவும்;நுணங்கு கேள்வி - நுட்பமான கேள்வியும் (பெற்ற); நுழைவினர்
எனினும் -
எதனையும் ஊடுருவிப் பார்ப்பவர் என்றாலும்; நோக்கும் -
பார்க்கின்ற;கண்புல வரம்பிற்று - கண் அறிவின் எல்லைக்குள்; ஆமே -
அடங்குமா;காட்சியும் கரையிற்று ஆமே - காணும் அறிவும் எல்லைக்குள்
அடங்குமா.

     இலங்கையில்மூன்று உலகப் பொருள்களும் அடங்கியிருக்கிறது என்றால்
(அவ்விலங்கை) கட்புலனுக்கு அடங்குமா ? அறிவின் எல்லைக்குள்
அடங்குமா?                                            (94)