தேனைச் சிந்திக்கொண்டிருக்கும் மகேந்திரமலையிலே; குதியும் கொண்டான் - குதித்தலையுஞ் செய்தான். பாம்பு, ஒன்றைஆவலோடு எதிர் பார்க்கும் போது, படம் எடுத்துக் கொண்டு எழுந்து நோக்கும் இயல்புடையது. அதனால் வானர வீரர்கள் அனுமனது வரவை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதற்கு, பை நாகம் உவமையாக்கப்பட்டது. கணத்தின் காலை - காலத்தின் சிறிய அளவு; நாகம் - சுரபுன்னை. அனுமன், கடல் தாவிய செய்தி, ஒரு நீண்ட படலமாக விரிந்தது. ஆனால் அவன் திரும்பிய செய்தி இரண்டு பாடல்களில் முடிக்கப்பட்டுள்ளது. இது, கவிச்சக்கரவர்த்தியின் கதை அமைப்புத் திறனைக்காட்டுகின்றது. (2) வானர வீரர்அனுமனைக் கண்டு மகிழ்தல் 6009. | போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க, வாய் வெரீஇநின்ற வென்றி வானர வீரர் மன்னோ, பாய்வரு நீளத்துஆங்கண் இருந்தன பறவைப் பார்ப்புத் தாய் வரக்கண்டதன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா ! |
வாய் வெரீ இநின்ற வானர வென்றி வீரர் - (அனுமன் நிலை யாதாகுமோ என்ற அச்சத்துடன்) வாய் விட்டுப் புலம்பிக் கொண்டிருந்த வெற்றிக்குரிய (அங்கதன் முதலிய) வானர வீரர்கள்; போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க - (பிராட்டியை அனுமன் தேடிக் கண்டு பிடித்து) மீண்டு வருதலாகிய தம் செயல் முற்றுப் பெற்றது என்பதனாலாகிய ஒப்பற்ற மகிழ்ச்சி அதிகப்பட; பாய் வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவைப் பார்ப்பு - (தாய்ப்பறவை ஆவலோடு) பாய்ந்து உட்புக வரும் கூட்டினிடத்து இருந்தனவாகிய பறவைக்குஞ்சுகள்; தாய் வர கண்டது அன்ன - தமது தாய்ப் பறவை (வெளியிற் சென்றது) மீண்டு வர, (அதனைப்) பார்த்ததைப் போன்ற; உவகையின் தளிர்த்தார் - மகிழ்ச்சியினால் உடல் பூரித்தார்கள். வானர வீரர்,பொம்மல் பொங்க உவகையின் தளிர்த்தார் என்க. வீரர்களது மகிழ்ச்சிக்கு, தாய்ப் பறவையின் வருகை கண்டு மகிழும் பறவைக் குஞ்சுகளின் உவகை உவமையாக்கப்பட்டுள்ளது. பொம்மல் - மகிழ்ச்சி; நீளம் - கூடு. (3) |