பக்கம் எண் :

திருவடி தொழுத படலம்855

என்னை மீட்க எம்பெருமானுக்கு) மனம் இல்லையாகுமானால், அதன் பின்பு;
உயிரோடு மங்குவென் என்று உன் மலரடி சென்னிவைத்தாள் -
உயிரிழப்பேன் என்று சொல்லி, உனது  தாமரை மலர் போன்ற திருவடிகளைத்
தலைமீது வைத்து (வணங்குவது போல) வணங்கிச் சொன்னாள்.

     பிராட்டி, தன்னைமீட்கக் காலக் கெடு வைத்ததை அனுமன்
சொன்னானாயிற்று. ‘மலரடி சென்னி வைத்தாள்’ பாவனை.           (45)

சீதாபிராட்டி தந்தசூடாமணியை அனுமன் இராமனிடம் சேர்த்தல்

6052.

‘வைத்தபின், துகிலின் வைத்த மா மணிக்கு அரசை
                          வாங்கி,
கைத்தலத்துஇனிதின் ஈந்தாள்; தாமரைக் கண்கள்
                          ஆர,
வித்தக ! காண்டி!’ என்று, கொடுத்தனன்-வேத
                          நல் நூல்
உய்த்துள காலம்எல்லாம் புகழொடும் ஒக்க நிற்பான்.

     வேத நல் நூல்உய்த்துள காலம் எல்லாம் - வேதங்களும் சாத்திர
நல்ல நூல்களும் வழங்குவதான காலக் கணக்குகள் எல்லாம் உள்ள அளவும்;
புகழொடும் ஒக்க நிற்பான் - புகழோடு கூடியிருக்கும் அனுமன்; வைத்தபின்
-
பிராட்டி, அவ்வாறு மலரடியைத் தன் சென்னியில் வைத்துக் கொண்ட பிறகு;
துகிலின் வைத்த மாமணிக்கு அரசை வாங்கி - தன் ஆடையில் முடித்து
வைத்திருந்த இரத்தினங்களுக்கெல்லாம் தலைமை பெற்று உயர்ந்த
சூடாமணியை அவிழ்த்து எடுத்து; கைத்தலத்து இனிதின் ஈந்தாள் - எனது
கையில் விருப்பத்துடன் கொடுத்தாள்; வித்தக - அறிவிற் சிறந்த பெரியோய்;
தாமரைக் கண்கள் ஆர, காண்டி என்று கொடுத்தனன் - செந்தாமரை
மலர் போன்ற உனது திருக்கண்கள் மகிழும்படி பார்த்தருளுக என்று கூறி
(அச்சூடாமணியை இராமபிரானிடம்) கொடுத்தான்.

    பிராட்டியிடமிருந்து பெற்று வந்த சூடாமணியை அனுமன் இராமனிடம்
தந்தது பற்றிக் கூறப்பட்டது. அனுமன் எப்படி, வேத நல் நூல் உய்த்துள
காலதத்துவம் வரை புகழோடு இருப்பானோ, அது போன்று, அவன் இப்போது,
செய்த இந்த நற்செயலும் என்றும் நிற்கும் என்பது கருத்து. வேத நன்னூல் -
வேதங்களாகிய நல்ல நூல்கள் என்றும் கொள்ளலாம்.               (46)