திரிகூடம் என்னும்மலையின் மீதுள்ள இலங்கையில் வாழ்கின்ற; கொற்றம் கார் நிறத்து அரக்கர் என்போர் வெய்யோர் - வெற்றியையும் கரிய நிறத்தையும் உடைய அரக்கர்கள் என்று சொல்லப்படும் கொடியவர்கள் செய்யும்; பேர்வு இலா காவல் - பெயர்தல் இல்லாத காவல்; பாடும் - செய்யும் திறமும்; பெருமையும் - சிறப்பும்; அரணும் - கோட்டை முதலிய அரண்களும்; முதலிய - முதலான; கணிப்பு இலாத - அளவில்லாத பெருமைகளை எல்லாம்; சொல்ல - அவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டுவர; நெடிது வழி எளிதின் போனார் - நீண்ட வழியை எளிதாகக் கடந்து போனார்கள். (51) பன்னிரு நாளில்அனைவரும் தென்கடல் சேர்தல் 6058. | அந் நெறிநெடிது செல்ல, அரிக் குலத்து அரசனோடும், நல் நெறிக்குமரர் போக, நயந்து உடன் புணர்ந்த சேனை, இன் நெடும்பழுவக் குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர், பன்னிரு பகலில்சென்று, தென் திசைப் பரவை கண்டார். |
அந்நெறி நெடிதுசெல்ல - அந்த வழி நீண்டு செல்வதால்; அரிக்குலத்து அரசனோடும் நல் நெறிக்குமரர் போக - குரங்குக் கூட்டத்துக்கு அரசனாகிய சுக்கிரீவனுடன் நல்வழியைப் பின்பற்றுபவர்களாகிய இராம இலக்குவர் செல்ல; நயந்து உடன் புணர்ந்த சேனை - விரும்பிக் கூட வந்த வானரச் சேனைகள் எல்லாம்; இன் நெடும் பழுவம் குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர் - இனிய நீண்ட சோலைகளை உடைய மலைவழியில்பகல் பொழுது முழுவதையும் கழித்த பிறகு; பன்னிருபகலில் சென்று -பன்னிரண்டாம் நாளில் போய்; தென் திசைப் பரவை கண்டார் - தெற்குத்திக்கில் உள்ள கடலைக் கண்டார்கள். சென்ற வழிநீண்டு கொண்டிருந்தமையால், சேனை பன்னிரண்டாம் நாளில், தென் திசைக்கடலைச் சென்று அடைந்தது. இராம இலக்குவர் சுக்கிரீவனுடன் சென்றனர் என்பதாம். ‘பகல் எலாம்’ - பகல் நேரம்; பன்னிருபகல் - பன்னிரண்டு நாள். (52) |