பக்கம் எண் :

20   யுத்த காண்டம்

கம்பநாடன்    வெறும்   கற்பனைக் கவிஞன் மட்டும் அல்லன்.
அரசியல் நுணுக்கங்களையும்,    போர்    முறைகளையும் நன்கு
தெளிந்த பேரறிவாளன் என்பதை அறிதல் வேண்டும்.
 

நான்கு    வாயில்களிலும்     உள்ளும்   புறமும்  நிற்கின்ற
படைகளின்     எண்ணிக்கையையும்,      அவற்றின்  தலைமை
ஏற்றிருப்போரின்    பெயர்களையும் கூறிவந்த  கம்பன், அதிலும்
ஒரு நுணுக்கம் பேசுகிறான்.    வடதிசையில் இராமன்  உள்ளான்
என்பதால், தானே அவ்வாயிலின் காவலை ஏற்றுக் கொள்வதாகக்
கூறிய     இராவணன், மேல் திசையில் அனுமன்   தலைமையில்
எதிரிகள்     உள்ளனர்    என்பதை    ஒற்றர் மூலம்  அறிந்து
அவ்வாயிலைக்      காக்க   இந்திரசித்தனை  அனுப்புகின்றான்.
அவ்வாறு     அனுப்பும்பொழுது   மகனை நோக்கி,   "மகனே!
அனுமனுடைய ஆற்றலையும், போர்த்திறமையையும் நீ  முன்னரே
அறிந்தவன்.     ஆதலால் 200 வெள்ளம் சேனையுடன்  மேற்கு
வாயிலைச் சென்று     அடைவாயாக" (6965) என்று  கூறுகிறான்.
ஒவ்வொரு வாயிலுக்கும் 200 வெள்ளம் சேனை உள்ளே உள்ளன
என்று     கூறும்    கவிஞன்,  வெளியே உள்ள குரங்குப் படை
ஒவ்வொரு வாயிலுக்கும் பதினேழு வெள்ளமே உள்ளது   என்று
கூறுகிறான். இவற்றைக் கூறிய கவிஞன் இன்னும் ஒரு படி மேலே
சென்று   இம்   மாபெரும்   படைகளுக்கு மிக இன்றியமையாத
உணவைச்   சேகரித்துக்     கொண்டுவந்து      தருகிறவர்கள்
எத்துணைப்பேர்   என்று  வினவுகிறான். கோட்டையின் உள்ளே
உள்ள எண்ணூறு  வெள்ளம்   சேனைகளுக்கு உணவு வழங்கல்
துறையில் ஈடுபட்டவர்கள்  இருநூறு வெள்ளம் ஆவர். அதாவது
அரக்கர் சேனையில் நான்கு வீரர்களுக்கு ஒருவன் வீதம் உணவு
வழங்கலில் ஈடுபட்டுள்ளர்.   ஆனால், வெளியே உள்ள குரங்குப்
படையில் 17 x 4 = 68  வெள்ளம்   குரங்குப் படைக்கு  உணவு
வழங்க இரண்டு வெள்ளம்  குரங்குகள்    நியமிக்கப்  பெற்றனர்
(6952). இதன்படி  பார்த்தால்    முப்பத்துநான்கு வீரர்கட்கு ஒரு
குரங்கு உணவு   வழங்க    ஏற்பாடாகியுள்ளது.  உணவு வழங்கு
துறையில் அரக்கர்  படையில்   நால்வருக்கு ஒருவரும், குரங்குப்
படையில்        முப்பத்துநான்கு       வீரருக்கு    ஒருவரும்
அமைக்கப்பெற்றனர்.            இதைப்      படிக்கும்பொழுது,
மொகலாயப்படையும், மராட்டியப்     படையும் மோதுவது பற்றி
வரலாற்றாசிரியர்கள் கூறியது   நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு
மொகலாயனுக்கும்,