உள் உணர்வு தோன்றிய கும்பகருணன் உரை |
7622. | 'அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் |
| அமைவிலர்; அந்தோ! யான் |
| கய்யும் கால்களும் இழந்தனென்; வேறு இனி |
| உதவல் ஆம் துணை காணேன்; |
| மய்யல் நோய்கொடு முடிந்தவன் நாள் என்று, |
| வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு |
| உய்யுமாறு அரிது' என்று, தன் உள்ளத்தின் |
| உணர்ந்து, ஒரு துயருற்றான். |
|
அய்யன் வில் தொழிற்கு- பெருமையில் சிறந்த இராமனது வில் தொழில் ஆற்றலுக்கு; ஆயிரம் இராவணர் அமைவிலர்- ஆயிரம் இராவணர் இருந்தாலும் எதிர்க்கும் வலிமை அமையாதவர் ஆவர்; அந்தோ யான் கய்யும் கால்களும் இழந்தனென்- ஐயோ நான் கையையும் காலையும் இழந்து விட்டேன்; வேறு இனி உதவ லாம் துணை காணேன்- இனி வேறு உதவக்கூடிய வகையையும் காண்கிலேன்; மய்யல் நோய் கொடு முடிந்தவன் - ஆசையாகிய நோயினால் இராவணன் முடிந்தனன்; நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு- வாழ்நாள் என்று எல்லையில்லாமல் வாழ்ந்த அவன்; உய்யுமாறு அரிது- இனிமேல் உயிர் பிழைத்து இருத்தல் இல்லை; என்று தன் உள்ளத்தின் உணர்ந்து- என்று தன் உள்ளத்தில் அறிந்து; ஒரு துயருற்றான்- ஒப்பற்ற மனத்துன்பம் அடைந்தான். |
இப்பாடல் தன் கையும் காலும் இழந்த கும்பகருணனின் மனச் செம்மையையும் பாசப் பெருஞ் சிறப்பையும் காட்டுகிறது. தன் துன்பத்துக்கு வருந்தாது தமையனுக்கு உதவும் வழி எதுவும் இல்லையே என்றும், அவன் உய்யுமாறு அரிது என்றும் எண்ணி வருந்துகிற கும்பகருணன் 'அன்புடையர் என்பும் உரியர் பிறர்க்கு' என்ற குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்தவன். பொன்றுவன் என்று சொல்லி வந்த செம்மல் சாவின் விளிம்பிலே நின்ற போதும் பாசப் பெருங்கடலில் தத்தளித்த பெருஞ்செம்மலாய் உயர்ந்து ஓங்கி நிற்பதை ஓர்க. வீர விளிம்பின் விளிம்பில் இராமனைப் பாராட்டி பாசப்பிணைப்பில் அண்ணனை நினைத்து அவலிக்கிறான்.
|
(351) |