வாள் படையுடைய சிபி மன்னனது கால்வழி வந்தவரே!; இக்கடன்கள் உடையீர் - நீங்கள் அச்சிபி போல் அன்புக் கடன்களும் உடையீர்; நீர் எம்வினை தீர்த்து - நீர் எங்களது உறவினால் உண்டான தீவினைகளைத் தீர்த்து; உம்முடைய கைக்கு அடைந்தான்- உம்முடைய கையில் அடைக்கலம் அடைந்தவனாகிய வீடணனது; உயிர் காக்கக் கடவீர் - உயிரைப் பாதுகாக்கக் கடவீர்; என் கடைக்கூட்டால்- இது என் கடைசி விருப்பமாகும். |
அண்ணனுக்கு உதவலாம் வழிவகை இல்லை என்றும் இனி அவன் உய்யுமாறு அரிது என்னும் உணர்ந்த கும்பகருணனின உடன்பிறப்புப் பாசம் தம்பியைக் காப்பாற்ற முற்படுகிறது. தன் குலம் தழைக்கவும், கையினால் எள்நீர் நல்கவும் தம்பியாவது உயிர் வாழ வேண்டும் என்று எண்ணிய கும்பகருணன் தன் இறுதி விருப்பமாக அதை வெளியிடுகிறான். தனக்கு என வாழப் பிறர்க்கு உரிய வாழ்வினன் அல்லவா அவன்? |
(353) |
7625. | 'நீதியால் வந்தது ஒரு நெடுந் தரும நெறி அல்லால், |
| சாதியால் வந்த சிறு நெறி அறியான், என் தம்பி; |
| ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் |
| உருக்கொண்டு அமைந்த |
| வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் |
| வேண்டினேன். |
|
ஆதியாய்- முழுமுதலே!; அரசர் உருக்கொண்டு அமைந்த வேதியா - உலகில் அரசர் வடிவு கொண்டு வந்து வேதங்களால் புகழப்படுகின்றவனே; நீதியால் வந்தது ஒரு நெடுந்தரும நெறி அல்லால்- நீதிமுறைப்படி அமைந்து வந்த சிறந்த அற நெறி அல்லாது; சாதியால் வந்த சிறுநெறி அறியான் - சாதிப் பிறப்பினால் உண்டான அறமற்ற நெறியை அறியாதவனாகிய;என் தம்பி- எனக்குத் தம்பியாகிய வீடணன்; உனை அடைந்தான்- உன்னை அடைக்கலமாக அடைந்தான்; இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன்- மீண்டும் அவனை உனக்கு அடைக்கலப் பொருளாகக் கொண்டு காத்தலை யான் வேண்டினேன். |
(354) |