பக்கம் எண் :

 கும்பகருணன் வதைப் படலம் 979

கொல்லும்- இவனைக்  கண்  எதிரே  கண்டால்  கொல்லுவான்;
இறை  நல்கானால்- சிறிது   கூட  அருள்  செய்ய  மாட்டான்;
உம்பியைத்தான்- ஆகவே உன் தம்பியையும்;  உன்னைத்தான்-
உன்னையும்; அனுமனைத்தான்- அனுமனையும்; ஒரு பொழுதும்-
ஒரு கணப் பொழுதும்; எம்பி பிரியானாக அருளுதி- என் தம்பி
பிரியாதிருக்குமாறு  திருவருள்  செய்க;  யான்  வேண்டினேன்-
இதனை யான் வேண்டிக் கொள்ளுகிறேன்.
 

வீடணனை இன்னபடி காத்தல் வேண்டும் என்று பின்னிரண்டு
அடிகளில்   கும்பகருணன்   குறிப்பிடுகின்றான்.  உன்னைத்தான்
உம்பியைத்தான்   அனுமனைத்தான்   என   அமைய வேண்டிய
மூன்றாமடி உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் என
எதுகைத்   தொடை   பற்றி   அமைந்தது. உண்ணாது உறங்காது
இராமனையே எப்பொழுதும் பாதுகாப்பவன் இலக்குவன் என்பது
கருதி இலக்குவனை முதற்கண் குறித்தான் எனலும் ஆம்.
 

(356)

தலையைக் கடலில் இடுமாறு வேண்ட, இராமனும் உடன்படல்
 

7628.

' "மூக்கு இலா முகம்" என்று முனிவர்களும்

அமரர்களும்

நோக்குவார் நோக்காமை, நுன் கணையால் என்

கழுத்தை

நீக்குவாய்; நீக்கியபின், நெடுந் தலையைக் கருங்

கடலுள்

போக்குவாய்; இது நின்னை வேண்டுகின்ற பொருள்'

என்றான்.

 

முனிவர்களும் அமரர்களும்- முனிவர்களும்  தேவர்களும்;
மூக்கு இலாமுகம் என்று நோக்குவார்- என் முகத்தை  மூக்கு
இல்லாத முகம் என்று சொல்லிக் காண்பார்கள்;  நோக்காமை -
அவர்கள்   அவ்வாறு  நோக்காமல்; நுன்  கணையால்-  உன
அம்பினால்; என் கழுத்தை நீக்குவாய்- என் கழுத்தை அறுத்து
நீக்குவாய்;    நீக்கிய   பின்    -  அறுத்து   நீக்கிய  பிறகு
நெடுந்தலையைக் கருங்கடலுள் போக்குவாய்-என் கழுத்தோடு
கூடிய  நெடிய  தலையை கரிய கடலுக்குள்ளே மூழ்கச் செய்வாய்;
இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான்-இதுவும் நான்
உன்னை   வேண்டிக்    கொள்ளுகின்ற   பொருள்   என்றான்
கும்பகருணன்.