பக்கம் எண் :

22   யுத்த காண்டம்

கொண்டிருந்த இமயம் போன்ற நம்பிக்கையாகும்.மும்மூர்த்திகளும்
தனக்கு    நிகரில்லை    என்று நினைக்கும்  ஒருவன் எவ்வாறு
மனிதர்களைத்    தனக்குச்    சமமாக நினைக்க  முடியும;் இந்த
எண்ணத்தில் மூழ்கியிருந்த இராவணனுக்கு மூன்று   அதிர்ச்சிகள்
ஏற்பட்டன. கரதூடணர்கள் "வில் ஒன்றில்,   கடிகை    மூன்றில்
ஏறினர் விண்ணில்"- (3131) என்று   கேள்விப்பட்டது     முதல்
அதிர்ச்சி. இராவணன் அதைச் சட்டை செய்யவில்லை. சுள்ளியில்
உறைதரு குரங்கு என்று அனுமனை எள்ளி நகையாடியபின் மகன்
முதலியவர்களை இழந்தும்   இராவணன்   தெளிவடையவில்லை.
அனுமன் மூவரினும் மேம்பட்டவன்  (5871) என்று இந்திரசித்தன்
கூறிய பிறகு இராவணன்   இரண்டாவது அதிர்ச்சியைப் பெற்றான்.
என்றாலும்,   மனிதர்களைப்பற்றி    அவன் கொண்ட எண்ணம்
மாறவில்லை.   இந்த நிலையில் வடக்கு வாயிலின் வழியே நின்ற
இலக்குவன்    நாணொலி    செய்தான்.   'ஒரு மனிதன் இப்படி
நாண்ஒலி செய்ய முடியுமா?' என்று வியக்கிறான் இராவணன்.
 

..................................................... வீரன் தம்பி
கூற்றின் வெம்புருவம் அன்னசிலை நெடுங்குரலும் கேளா,
ஏற்றினன் மகுடம், இவன் 'என்னே இவன் ! ஒரு
மனிசன்' என்னா

(7159)
 

இலக்குவன்     நாணொலி  கேட்டுத் தன் மகுடத்தையே ஒரு
முறை  தூக்கி வைத்துக்கொண்டான்போலும். இது இலக்குவனுக்குச்
செய்த வீர   வணக்கம் போலும். 'இவனும் ஒரு மனிதனா?' என்று
கேட்கும்பொழுது மூன்றாவது அதிர்ச்சி அடைகிறான் இராவணன்.
 

இக்காலப்    போர்முறையிலும்கூட     இருளில்   போர்புரிய
நேரிட்டால் ஒளி உமிழும் குண்டுகளை (flair bombs) விமானத்தில்
இருந்தோ அல்லது பீரங்கிகள் மூலமோ எதிரிகள் பக்கம் செலுத்தி
அவர்கள் நிலை அறிகின்றனர்.  இந்த நுணுக்கத்தையும் கம்பநாடன்
பேசுகிறான்.
 

"கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக்கொண்டான்;
அள்ளி நுங்கலாம் ஆர் இருட் பிழம்பினை அழித்தான்

(8629)
 

என்ற இப்பாடல்மூலம் இருளில் உள்ள பகைவர்களின் நிலையை
அறிய    ஒளி    உமிழும்   பாணங்களைப் பயன்படுத்தினர் என்று
தெரிகிறது.