'முட்டிய செருவில், முன்னம் முதலவன் படையை என்மேல் விட்டிலன், உலகை அஞ்சி; ஆதலால், வென்று மீண்டேன்; கிட்டிய போதும் காத்தான்; இன்னமும் கிளர வல்லான்; சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான். |
கம்ப இராமாயணத்தின் கடைசிக் காண்டமாகிய யுத்த காண்டம் 39 படலங்களைக் கொண்டது. கடல் காண் படலம் தொடங்கி, விடை கொடுத்த படலம் ஈறாக உள்ள முப்பத்தொன்பது படலங்களில் ஒரு படலம் நீங்கலாக ஏனைய அனைத்துப் படலங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் பொருத்தமுடையதுமாக அமைந்துள்ளன. ஆனால், யுத்த காண்டத்தோடு, ஏன் இராமகதையோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத இரணியன் கதை, இரணியன் வதைப் படலம் என்ற பெயரோடு மந்திரப் படலத்தை அடுத்துக் காணப்படுகிறது. காப்பியக் கட்டுக்கோப்பும், அதன் உறுப்புக்களும், அந்த உறுப்புக்கள் ஒன்றோடொன்று பொருந்தும் முறையும்பற்றி ஆய்ந்து எழுதிய தமிழகத்தின் முதல் திறனாய்வாளராகிய வ.வே.சு.ஐயர் கூட இப்படலம் காப்பியத்தோடு தொடர்பின்றி தனித்து நிற்பதைச் சுட்டுகிறார். அப்படியானால், உலகில் மிகச் சிறந்த காப்பியப் புலவனாகிய கம்பனுக்கு இப்படலத்தின் பொருந்தாமை தெரியாமலா இருந்திருக்கும்? தெரிந்திருந்தும் இப்படலத்தை இங்கே வைத்துள்ளான் என்றால், அதற்குரிய காரணத்தை ஆய்வது நலம் பயக்கும். |