பக்கம் எண் :

72யுத்த காண்டம் 

6178.

'நீலகண்டனும் நேமியும் நேர் நின்று நேரின்,

ஏலும் அன்னவருடை வலி அவன்வயின் எய்தும்;

சாலும் நல் வரம் நினைந்து, அவன் எதிர் செலல்

தவிர்ந்து,

வாலிதன்னை, அம் மனிதனும், மறைந்து நின்று எய்தான்.

 

நீலகண்டனும் - நீல   நிறமான கழுத்தை  உடைய சிவனும்;
நேமியும் -  சக்கராயுதத்தை  உடைய திருமாலும்; நேர் நின்று
நேரின் 
-   நேருக்கு   நேர்   நின்று   பொருதால்;   ஏலும்
அன்னவருடை வலி
-  எதிர்க்கும்  அவர்களது  வலிமையும்;
அவன் வயின்  எய்தும் - அந்த வாலியிடம் சேர்ந்து விடும்;
சாலும்  நல்வரம் நினைந்து
-  மிக்க அந்த நல்ல வரத்தை
நினைத்தே; அம்மனிதனும் - நீ சொன்ன அந்த மனிதனாகிய
இராமனும்;  அவன் எதிர் செலல் தவிர்ந்து -  அவனுக்கு
எதிரிலே  சென்று    நின்று    போரிடுவதைத்    தவிர்த்து;
வாலிதன்னை 
-   அந்த  வாலியை;   மறைந்து  நின்று
எய்தான்
- மறைந்து நின்று அம்பெய்து கொன்றான்.
 

நேமி-சக்கரம், இங்கு அப் படை கொண்ட திருமாலைக்
குறித்து   நின்றது.   நேரின்-எதிர்த்தால் ஏலும்-எதிர்க்கும்.
எதிர்த்தவர் பலத்தில்  பாதி வாலிபால் எய்தும் என்பதனை
"கிட்டினார்  பொரக்கிடைக்கின் அன்னவர் பட்ட நல்வலம்
பாதி   எய்துவான்"  (3825)   என்று   முன்னும்  கூறுதல்
காணலாம்.
 

(108)
 

6179.

'ஊன வில் இறுத்து, ஓட்டை மா மரத்துள் அம்பு

ஓட்டி,

கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து, உயர் வனம் குறுகி,

யான் இழைத்திட இல் இழந்து, இன் உயிர் சுமக்கும்

மானுடன் வலி, நீ அலாது, யார் உளர் மதித்தார் ?'

 

ஊனவில் இறுத்து - ஏற்கனவே ஊனமான வில்லை முறித்து;
ஓட்டை மாமரத்துள் அம்பு ஓட்டி
- ஓட்டை மரத்திலே அம்பு
செலுத்தி;  கூனி  சூழ்ச்சியால் அரசு  இழந்து - கூனி செய்த
சூழ்ச்சியினால் ஆட்சியை இழந்து;உயர்வனம் குறுகி - உயர்ந்த
மரங்கள் நிறைந்த வனம் அடைந்து; யான்  இழைத்திட  இல்
இழந்து
- நான் செய்த  செயலால்  மனைவியை  இழந்து; இன்
உயிர்   சுமக்கும்
-  இன்னுயிரைச் சுமந்து திரியும்; மானுடன்
வலி
- ஒரு   மனிதனுடைய வலிமையை;நீ அலாது - உன்னை
அல்லாமல்; யார்  உளர்  மதித்தார் -  மதித்தவர்கள் வேறு
யாருள்ளார்?