எந்த விதத்திலாவது இராவணனுக்கு நல்லுரை கூறி நெறிப்படுத்த நினைத்த வீடணன், இரணியனது செய்தியைக் கூறலானான். இரணியன் காசிபருக்கு திதி வயிற்றில் பிறந்தவன். பொன்னிறமுடையவன் என்பதால் இரணியன் எனப்பெயர் பெற்றான். பிரமனை நோக்கித்தவம் செய்து எவராலும் தனக்குச் சாவு நேராதபடி வரம் பெற்றவன். இரணியனுக்கு ஒரு தம்பி, இரணியாட்சன்; திருமால் வராக அவதாரம் செய்து அவனைக் கொன்றார் என்பதால் திருமாலிடம் இரணியன் பகைமை பாராட்டலானான். தனது வரபலத்தால் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்திவந்தான். தன்னையே தெய்வமாக வணங்கும்படி வாழ்ந்தான். இரணியனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனைத் தக்க ஆசிரியரிடம் அனுப்பி, வேதம் முதலான கலைகளை கற்பிக்க முற்பட்டான். ஆசிரியன் 'இரண்யாயநம' என்று சொல்ல, பிரகலாதன் 'நமோ நாராயணாய' என்றான். அஞ்சிய ஆசிரியன், இரணியனிடம் தெரிவிக்க, மகனை அழைத்து வரச் செய்து இரணியன் பலவாறு நயந்தும் நலிந்தும் பிரகலாதன் கருத்தினை மாற்ற முயன்றான். பிரகலாதன் உறுதி காட்டினான். அவன் உயிரைப் பறிக்கும் முயற்சியிலும் இரணியன் இறங்கினான். இரணியன் கருத்து நிறைவேறவில்லை. இறுதியில், 'நீ கூறிய அரி எங்கே இருக்கிறான்' எனக் கேட்டான். 'அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்' என்று பிரகலாதன் கூறினான். இந்தத் தூணில் நீ சொன்ன அரி இல்லாமல் போனால் உன்னைக் கொன்று தின்பேன் என்று கூறி, இரணியன் தூணைக் கையால் எற்ற, தூணிலிருந்து திருமால் நரசிங்கமாக வெளிப்பட்டு இரணியனைக் கொன்று, பிரகலாதனுக்கு அழிவற்ற பேற்றை உதவினார் என்பது இரணியன் வரலாறு. முதல் நூலாகிய வான்மீகத்தில் இந்த வரலாறு கூறப்படவில்லை என்பது கருதத்தக்கது. |
இறைவனாகிய திருமாலை இகழ்ந்து, உலகினுக்குத் தீங்கு செய்து வாழ்வோர் எவராயினும் அழிந்து படுவர் என்பதை இராவணனுக்கு எடுத்துக் கூறி, அப்பரமனுக்குப் பணிந்து, அவனை அடைக்கலம் புகுந்தவர்கள் பிரகலாதனைப் போ(ல)ப் பெரும் பேறு பெறுவர் என்பதை இராவணனுக்கு உணர்த்த வீடணன் இந்த வரலாற்றைக் கூறியதாகக் கம்பர் அமைத்துள்ளார். உயர்ந்த குறிக்கோளும், சிறந்த கவிநயமும், இலக்கியச் சிறப்பும் வாய்ந்ததாக இப்படலம் அமைந்திருப்பதைக் கற்போர் மகிழ்ந்து போற்றுவர் எனலாம். |