பக்கம் எண் :

82யுத்த காண்டம் 

6192.

'வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று

மருவான்;

கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை

குடையான்;

பண்டைத் தெண் திரைப் பரவை நீர் உவர் என்று

படியான்;

அண்டத்தைப் பொதுத்து, அப் புறத்து அப்பினால்

ஆடும்.

 

வண்டல் தெண் திரை ஆற்று  நீர் - வண்டலோடு கூடிய,
தெளிந்த அலைகளையுடைய ஆற்று நீர்; சில என்று மருவான் -
அளவில்   சிறியதென்று   அதன்பக்கம்  செல்லான்; கொண்டல்
கொண்டநீர்
-  மேகம் கொண்ட மழை  நீரை; குளிர்ப்பு  இல
என்று அவை குடையான்
-   குளிர்ச்சி இல்லை என்று அதில்
குளிக்க மாட்டான்;  பண்டைத் தெண் திரைப் பரவை நீர் -
பழமைவாய்ந்த  தெளிந்த அலைகளை உடையகடல் நீர்;  உவர்
என்று   படியான் 
-   உப்புச்சுவையுடையது  என்று குளிக்க 
மாட்டான்;அண்டத்தைப்  பொதுத்து - அண்டத்தைத் துளை
செய்து;அப்புறத்து அப்பினால் ஆடும்- பெரும்புறக்  கடல்
நீரால் நீராடுவான்.
 

"பண்டைத்   தெண்திரைப்  பரவை"   கடலின்  பழமையை
உணர்த்தும் "தொன்று முதிர் பௌவம்" (புறம்-6) என்றது காண்க.
பொதுத்தல் - துளைத்தல்.
 

(4)
 

6193.

'மரபின், மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி,

அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி,

பரவும் இந்திரன் பதியிடைப் பகற் பொழுது அகற்றி,

இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்.

 

மரபின்  மாபெரும்  புறக்கடல் - விதிப்படி பெரும் புறக்
கடல்   நீரிலே;  மஞ்சனம்   மருவி  -  (காலையிலே) நீராடி
(முடித்துப்பின்);  அரவின்  நாட்டிடை  -   நாகலோகத்திலே; 
மகளிரொடு இன் அமுது  அருந்தி -  நாக  கன்னியருடனே
இனிய   உணவை உண்டு;  பரவும்  இந்திரன்  பதியிடை -
எல்லோராலும்  போற்றப்படும்  இந்திரன்  உலகத்திலே; பகல்
பொழுது அகற்றி
-  பகல்   பொழுதைக்  கழித்து;  இரவின்
ஓலக்கம்  நான்முகன் உலகத்துள்  இருக்கும் 
-   இரவு
நேரத்திலே     பிரமன்     உலகமான    சத்தியலோகத்திலே
கொலுவீற்றிருப்பான்.