பக்கம் எண் :

13   யுத்த காண்டம்

மாட்சிமைப்பட்ட    (மாண்ட)    அறத்தையும், அறவழியையும்
அடிப்படையாகக் கொண்டே ஆகும்.
 

இப்பாடல், கம்பன்  மனத்தில்   ஒரு      தூண்டுதலை
ஏற்படுத்தியிருக்க வேண்டும். இராவணனுடைய    படைபலம்,
வரபலம், ஆயுதபலம்  என்பவற்றிற்கு ஈடு இணையே இல்லை.
போதாததற்கு இவை அனைத்தையும் உடைய   இந்திரசித்தன்,
இராமனும் கைவிதிர்க்கும்படியான கும்பகர்ணன் ஆகியோரின்
துணைபலம்    இவை   ஒருபுறம். இராவணன் பலமனைத்தும்
நான்குடன் மாண்டதாயினும், அங்கே அறம் என்பதே இல்லை.
அறநெறிச்  செல்லும் பழக்கத்தை அரக்கர் கோமான் என்றோ
கை விட்டுவிட்டான்.
 

இவனை எதிர்த்து நிற்கும் இராகவன் படை குரங்குகளால்
ஆனது,   என்றாலும்,    அறமும்,  அறநெறியும் இராமனிடம்
உள்ளன.    அதனால்   வெற்றி   யாருக்கு  என்பது தெரிந்த
விஷயமே.
 

புறநானூற்றின்     இக்கருத்தை, வளர்ந்துவரும் சோழர்கள்
அறிந்துகொள்ள வேண்டும். அறிந்து, அதன்படி நடந்தாலொழிய
அவர்கள்    பெறும்   வெற்றிகள் நிலைபெறாமல் போய்விடும்
என்பதை    அழுத்தமாகக்   கூற      விரும்புகிறான் கம்பன்.
அதனாலேயே,   காப்பிய    நாயகனாகிய இராமனை அறத்தின்
மூர்த்தி, அற ஆழியன்.   அறத்தின்    நாயகன் என்றெல்லாம்
சந்தர்ப்பம் நேரும்பொழுதெல்லாம்   இந்த    அடைமொழியை
இராமனுக்குக்     கொடுத்துக்கொண்டே   வருகிறான். தாடகை
வதத்தில் தொடங்கி, முதற்போர் புரிகின்ற வரையில்    இராமன்
செய்த   போர்கள்      பலப்பலவாகும்.   ஆயிரக் கணக்கான
படைவீரர்களைக் கொண்ட கரதூடணர்களை   வென்றது முதல்,
தனியாக     நின்ற     விராதனை   வதைத்தது வரை, கும்பன்
முதலானவர்களையும் வென்றது வரை இராமனுக்குத் துணையாக
நின்றது அறம் ஒன்று மட்டுமே ஆகும்.
 

இதைக் கூறவந்த கம்பநாடன்  தான் மட்டும் இக்கருத்தைக்
கூறுவதாக  இல்லாமல், இராமன்    கூற்றாகவும்  இக்கருத்தை
வலியுறுத்துகிறான். முதற் போரில் வெகு    வீரத்துடன்  வந்த
இராவணன்,   வீரமும்    களத்தே  போட்டு வெறுங்கையுடன்
நிற்கிறான். அவனைப்   பார்த்து   அறத்தின்    மூர்த்தியாகிய
இராமன் கூறும் சொற்கள் நினைவில் பதிக்க வேண்டியவை.