5. இலங்கை கேள்விப்படலம் |
இராமபிரான் வீடணனிடம் இலங்கையின் படைபலம் அரக்கர்களின் வலிமை, இராவண சேனையின் அளவு போன்றவைகளைக் கேட்டு அறிந்ததைக் கூறும் பகுதியாதலின் இப்பெயர் பெற்றது. |
இலங்கை வேந்தனாக முடி சூடி, தன்னை வந்து வணங்கிய வீடணனுக்கு இராமன் ஆசனம் தந்து அமரச் செய்கிறான். பிராட்டியின் நினைவால் வருந்துகிறான். சுக்கிரீவன் இராமனுக்கு ஆறுதல் கூறிப் பின் வீடணனுடன் கலந்து யோசித்து மேலே செய்ய வேண்டிய செயல்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டுகிறான். இராமன் மனம் தெளிந்து, வீடணனை அழைத்து வரச்செய்து, இலங்கையின் படைபலம் முதலியவைகளைப் பற்றிக் கேட்கிறான். |
வீடணனும் இலங்கையின் தோற்றம், படைபலம், மதிலின் சிறப்பு, காவல் புரியும் வீரர்களின் வலிமை, அரண்மனைக் காவலர்களின் சிறப்பு ஆகியவைகளை எடுத்துரைக்கிறான். இலங்கை நகரமே தீக்கிரையானதும். அவனுடைய போர்த்திறமையும் வீடணன் கூறக் கேட்ட இராமன், மகிழ்ந்து அனுமனைப் பாராட்டிப் பேசுகிறான். அனுமன் இராமனைத் தொழுதுவிட்டு ஒன்றும் பேசாது நிற்க, வானரவீரர்கள் அனுமனது வீரச் செயலை அறிந்து வியக்கின்றனர் என்பவை இந்தப் படலத்துள் கூறப்படும் செய்திகள். |
இராமபிரான் வீடணனுக்கு இடமளித்தல் |
கலிவிருத்தம் |
6516. | வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு |
| அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழித் |
| தந்தனன் விடுத்தபின், இரவி, 'தன் கதிர் |
| சிந்தின வெய்ய' என்று எண்ணி, தீர்ந்தனன். |
|
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு- பாடி வீட்டை வலம் வந்தபின், வந்து இராமபிரானது திருவடிகளை வணங்கிய அசுரர் குலவேந்தனான வீடணனுக்கு; அந்தம் இல்லாததோர் உறையுள்- எல்லையற்ற பரப்பை உடைய ஒரு உறைவிடத்தை; அவ்வழித் தந்தனன் விடுத்தபின் - அந்தப் பாசறையிலே கொடுத்து அவனை அனுப்பி வைத்தபின்; இரவிதன் கதிர் சிந்தின வெய்ய |