பக்கம் எண் :

14   யுத்த காண்டம்

'அறத்தினால் அன்றி,   அமரர்க்கும் அருஞ்சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி'

(7267)
 

யுத்த    காண்டத்திற்கு   5000  பாடல்களைக் கம்பன்
ஒதுக்கியதின் இரகசியம் இதுவே ஆகும். இனி,  அகிம்சையும்,
பொறுமையும் அனைவராலும் கைக் கொள்ளப்பட  வேண்டும்.
வன்முறை    தவிர்க்கப்பட    வேண்டும்   என்று பெரிதும்
வலியுறுத்தப்பெறும் இக்காலத்திற்குக் கம்பநாடன் காப்பியமே
தேவையா என்று கேட்பவர்கள்    சிலர் உண்டு.   எல்லாப்
பொருள்களையும்   வன்முறை   என்று பொருள் செய்வதால்
வரும்    தவறான முடிவாகும் இது. ஒருவருடைய முதுகிலோ,
மார்பிலோ  ஒரு சிறிய கத்தியால் கிழித்தால், அது வன்முறை
என்றும்,  கொலைக்    குற்றம் என்றும் கூறப்படும். ஆனால்,
அதைவிடப்  பெரிய    கத்தியைக்   கொண்டு ஒருவருடைய
வயிற்றைக் கிழித்து   அறுவை மருத்துவம் செய்கின்றார் ஒரு
மருத்துவர். அதை யாரும்  வன்முறை     என்றோ, கொலை
என்றோ கூறுவதில்லை. ஒருவரை வாழவைப்பதற்காக அறுவை
மருத்துவம் செய்யப்படுகின்றது. மக்களைக் கொடுமைப்படுத்தி,
தன்னலம் ஒன்றிற்காகவே   பிறர்க்குத்   துயர் விளைவிக்கும்
ஒருவனை, அவன் அரசனாயினும்  சரி, ஆண்டியாயினும் சரி,
கொல்வது    அறமே      அன்றி, மறம்  அன்று. அபலைப்
பெண்கட்கும்,         குழந்தைகட்கும்          கொடுமை
இழைக்கப்பட்டபோது ஆண்மை உடையவர்கள் அனைவரும்
கொடுமை  இழைப்பவர்களை வாளேந்திக் கொல்வது அறமே
என்றும், அதுவும்  அகிம்சையே   என்றும் மகாத்மா காந்தி
கூறியதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
 

இதனை    நன்கு    புரிந்துகொண்டால், இராமன் செய்த
போரும்,  பாண்டவர்கள்   செய்த போரும் வன்முறை அன்று
என்பதை   அறிய    முடியும்.     செயல்    ஒன்றைமட்டும்
வைத்துக்கொண்டு, அதனை    வன்முறை   என்றும், கொலை
என்றும் பெயர் சூட்டத் தொடங்கினால், அறுவை மருத்துவமும்
கொலையாகவே கருதப்பட நேரிடும். அறத்தின் அடிப்படையில்
தீமையை எதிர்த்துப்  போராடுகையில் தன்னலம் என்பது ஒரு
சிறிதும் தலைகாட்டக் கூடாது. போருக்குக் காரணம் தன்னலமாக
இருக்குமேயானால்   அங்கே   அறத்தின் துணை கிடைக்காது.
இராமன் செய்த போர்கள் அனைத்தும், தன்னைச் சரணடைந்த
முனிவர்களையும்