| நாள்கள் சாலவும் நீங்கலின், நலம் கெட மெலிந்த |
| தோள்கள் வீங்கி, தன் தூதனைப் பார்த்து, இவை |
| சொன்னான்: |
|
கேள் கொள் மேலையான் - தன்னுடன் நட்புக்கொண்ட வீடணன்; கிளத்திய பொருள் எலாம் கேட்டான் - கூறிய பொருள்களை எல்லாம் கேட்ட இராமபிரான்; வாள் கொள் நோக்கியை - வாள் போன்ற கண்களை உடையவளும்; பாக்கியம் பழுத்தன்ன மயிலை- புண்ணியம் பழுத்துப் பயன் தந்தது போன்ற மயிலைப் போன்றவரும் ஆகிய சீதாபிராட்டியை; நாள்கள் சாலவும் நீங்கலின்- பல நாட்கள் பிரிந்தமையால்; நலம் கெட மெலிந்த தோள்கள் வீங்கி - அழகு கெட மெலிந்து போன தோள்கள் வீங்கி; தன் தூதனைப் பார்த்து இவை சொன்னான்- தன் தூதனான அனுமானைப் பார்த்துப் பின்வருமாறு கூறலானான். |
கேள்- நட்பு. மேலையான்- வீடணன்; மேன்மையுடையவன் (மேலோன்); பொருள் - கருத்து. புண்ணியத்தின் பயனை 'புண்ணியம் பழுத்தன்ன' என்றான். தோள்கள் பிராட்டியின் பிரிவினால் அழகு கெட்டு மெலிந்திருந்தன வாதலின் 'நலம் கெடமெலிந்த தோள்கள்" என்றார். அனுமன் செயல் கேட்டுப் பூரித்த தோள்களை' வீங்கி என்றார் வீங்குதல் - பருத்துப் பூரித்தல். |
(69) |
6585. | 'கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய்; |
| ஊட்டினாய், எரி ஊர் முற்றும்; இனி, அங்கு ஒன்று |
| உண்டோ? |
| கேட்ட ஆற்றினால், கிளிமொழிச் சீதையைக் |
| கிடைத்தும் |
| மீட்டிலாதது, என் வில் தொழில் காட்டவோ?-வீர! |
|
வீர- வீரம் மிக்கவனே!; கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய் - இலங்கையில் இராவணன் கூட்டிவைத்திருந்த படையில் பாதிக்கு மேல் நீயே கொன்று தீர்த்தாய்; எரி ஊர் முழுதும் ஊட்டினாய் - இலங்கை நகர் முழுவதும் தீமூட்டி அழியச் செய்தாய்; இனி, அங்கு ஒன்று உண்டோ - இனி அங்கு நான் செய்ய வேண்டியது ஏதேனும் ஒன்று உள்ளதோ?; கேட்ட ஆற்றினால் - வீடணன் கூறக் கேட்ட செய்திகளால்; கிளிமொழிச் சீதையை- கிளி போன்ற மொழிகளை உடைய சீதா தேவியை; |