'நிலன் உற இறைஞ்சி' நெடுஞ்சாண் கிடையாகத் தரையிலே வீழ்ந்து வணங்கி, 'அஷ்டாங்க நமஸ்காரம்' எட்டு உறுப்புக்களும் தரையிலேபடத் தெய்வத்தையும், சான்றோர்களையும் வணங்க வேண்டும் என்பர். இராமபிரானது புகழ் மொழிகளைக் கேட்டு வெட்கமுற்றான் ஆதலின் 'நாணினன்' என்றார் 'தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச' என்ற கலித் தொகை (கலி 119) நினைவு கூரத்தக்கது - 'உரவு' அறிவின் திண்மையை உணர்த்தும்; அத்தகைய திண்மை உடையவன் ஆதல் பற்றி அனுமனை 'உரவோன்' என்றார் 'நெடியோன்' என்றது, கடலைத் தாண்டியது, அரக்கர்களை அழித்தது, இலங்கை நகரை எரித்தது போன்ற செயல்களை எண்ணிக் கூறியதாகும். வீடு பேறடைந்தார் அந்தப் பேரின்பத்தினை எண்ணி வியத்தல் போல் அனுமன் வெற்றியைக் கேட்டு வானரத்தலைவர்களும், வானர வேந்தனான சுக்ரீவனும் வியந்தனர் என்பது கருத்து.
|