கொடியகடலை; கிளர் பெருஞ்சேனை- கிளர்ந்து எழும் நமது பெரிய சேனை; கடக்கும் வண்ணமும் எண்ணுதி- கடந்து இலங்கை செல்வதற்குரிய வழியைப் பற்றி நினைப்பாயாக. |
பலநூல்களைக் கற்றுணர்ந்தவன் என்பதால் வீடணனை 'எண்ணும் நூல் கற்றாய்' என இராமன் அழைத்தான். கடல் நமக்குக் கட்டுப்பட்டுவிட்டால் மூவுலகத்தையும் அழிப்பது பொருட்டல்ல. எனவே, நமது படை இந்தப் பெரிய கடலைக் கடப்பதற்குரிய வழியைச் சிந்திப்பாயாக என்பான் 'கடக்கும் வண்ணமும் எண்ணுதி' என்றான் இதனை வீடணன் கூற்றாகக் கொண்டு பொருள் செய்வாரும் உளர். அளவிலா நூல் கற்றவனே என இராமனை விளித்து இந்தக் கடலைக் கட்டுப்படுத்திவிட்டால் இராக்கதரை வெல்லுதல் ஒரு பொருட்டன்று; எனவே, கடலைக் கடக்கும் வழிபற்றிச் சிந்திப்பாயாக' என்று வீடணன் கூறியதாகப் பொருள் கொள்வர். |
(1) |
வீடணன் கடல் கடக்க வழி கூறுதல் |
6590. | 'கரந்து நின்ற நின் தன்மையை, அது, செலக் |
| கருதும்; |
| பரந்தது, உன் திருக் குல முதல் தலைவரால்; |
| பரிவாய் |
| வரம் தரும், இந்த மாக் கடல்; படை செல, வழி |
| வேறு |
| இரந்து வேண்டுதி, எறி திரைப் பரவையை' என்றான். |
|
இந்த மாக்கடல்- நமக்கெதிரே உள்ள இந்தப் பெரிய கடல்; உன் திருக்குல முதல் தலைவரால் பரந்தது- உனது சிறந்த குலமான சூரிய குலத்திலே தோன்றிய முதல் தலைவரான சகரர்களால் தோண்டப்பட்டுப் பரந்திருப்பதாகும்; கரந்து நின்ற நின்தன்மையை- தெய்வ வடிவை மறைத்து மானிட வடிவம் கொண்டு நின்ற உனது தன்மையை; அது செலக்கருதும் - அக்கடல் தெய்வம் முழுதும் கடைபோக அறியும்; பரிவாய் வரும் தரும்- நமக்குப் பரிவுடனே வரம் அளிக்கும் எனவே; படை செல வழி- நமது படை கடலைக் கடந்து செல்வதற்குரிய வழியை; எறிதிரைப் பரவையை- பொங்கும் அலைகளை உடைய இந்தக் கடலை; வேறு இரந்து வேண்டுதி என்றான்- தனியே இருந்து, சரணடைந்து இரந்து வேண்டிக் கொள்வாயாக என்றான். |