பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 339

வேலை சூழ் ஞாலம்- கடல்  சூழ்ந்த இந்த  உலகமானது;
கொழுங்கதிர்ப்பகை  -     செழுமைமிக்க     சூரியனுடைய
கிரணங்களுக்குப் பகையாகிய; கோளிருள் நீங்கிய கொள்கை-
(இரவெல்லாம்) நிறைந்திருந்த இருள்நீங்கிய தன்மை; செழுஞ்சுடர்
பனிக் கலைஎலாம்
- செழுமையான ஒளியை  உடைய குளிர்ந்த
எல்லாக்கலைகளும்;   நிரம்பியதிங்கள்   -   நிறைந்திருக்கும்
சந்திரனை;   புழுங்கு   வெஞ்சினத்து  -  மனம்   புழுங்கிக்
கொடியசினத்தைஉடைய; அஞ்சனப்  பொறி  வரி  அரவம்
- அஞ்சனம்  போன்ற புள்ளிகளையும்  வரிகளையும்  கொண்ட
பாம்பாகியராகு;  விழுங்கி  நீங்கிய  தொத்தது -   விழுங்கி
உமிழ்ந்ததை ஒத்துக்காணப்பட்டது.
 

அஞ்சனப்பொறி - உவமைத் தொகை. கலை- சந்திரனுடைய
ஒளிக்கற்றை. கொள்கை - தன்மை.
 

(4)
 

6593.

'தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக !'

என்னும்

பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,

கருணைஅம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி;

வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி.
 

தருண மங்கையை மீட்பதோர்-இளமைப் பருவத்தினளான
சீதையை  இராவணனுடைய  சிறையிலிருந்து  மீட்டுக் கொண்டு
வருதற்குரிய ஒரு; நெறி  தருக  என்னும் பொருள் நயந்து-
வழியைத்  தருவாயாக என்னும்  பொருளை விரும்பி;  நல்நூல்
நெறி அடுக்கிய  புல்லில்
- நல்ல நூலாகிய வேதத்தின் கூறிய
நெறிப்படி   அடுக்கப்பட்ட  தருப்பைப்  புல்லில்; கருங்கடல்
நோக்கி 
-    கருமை   நிறமான    கடலைப்   பார்த்தபடி; 
கருணையங்கடல்   கிடந்தனன்  -   கருணைக்  கடலான
இராமபிரான் படுத்தபடி  இருந்தவன்; விதிமுறை  வணங்கி-
வருணனைத்  தொழவேண்டியமுறைப்படி  தொழுது; - வருண
மந்திரம்    எண்ணினான் 
  -    வருண   மந்திரத்தைத்
தியானித்தவனாக இருந்தான்.
 

மாறாத இளமையுடைய சீதாபிராட்டியை 'தருண  மங்கை'
என்றார்.  தருணம்  -  இளமை. வேதமந்திரங்களைக்  கூறி
அதன்படி அடுக்கப்பட்ட  தருப்பைப்புல் ஆதலின் 'நல்நூல்
நெறி அடுக்கியபுல்' என்றார். நல்நூல் - வேதம். வருணனை
வணங்கவேண்டிய விதிமுறைப்படி  வணங்கியதை 'விதிமுறை
வணங்கி' என்றார். கருங்கடல் - பண்புத்தொகை. எண்ணுதல்
- இடைவிடாது நினைத்தல் (தியானித்தல்)