பக்கம் எண் :

388யுத்த காண்டம் 

அடைவதுண்டோ?    (இல்லை);    மாய்  வினை   இயற்றி-
அழியும்படியான  செயலைச் செய்து;  வருணன்  மேல் வந்த
சீற்றம்
- வருணன்   மீது   வந்த   இராமபிரானது   வெகுளி
(வருணனை எதுவும் செய்யாது); தீவினை உடையார் மாட்டே-
தீய செயல்களைப் புரிந்துவந்த  மருகாந்தாரத்து அரக்கர் பக்கம்
சென்று; தீங்கினைச் செய்ததன்றே-  அவர்களுக்குத்  தீங்கை
விளைவித்ததல்லவா?
 

அற   நெறியில்   நின்று    ஒழுகும்     நல்லோர்களுக்கு
எவ்விதத்திலும் நன்மையே நடக்கும் என்ற பொதுப் பொருளைக்
கூறி வருணன்  உய்ந்தான் மருகாந்தாரத்து  அரக்கர் அழிந்தனர்
என்ற சிறப்புப் பொருளை விளக்குவதால் இது வேற்றுப் பொருள்
வைப்பணியாகும். ஆய்  வினை -  ஆராய்ந்து  செய்யும்  நல்ல
செயல்கள். மாய் வினை - மாய்ப்பதற்குரிய வினை.
 

(80)
 

6669.

பாபமே இயற்றினாரை, பல் நெடுங் காதம் ஓடி,
தூபமே பெருகும் வண்ணம், எரி எழச் சுட்டது

அன்றே,

தீபமே அனைய ஞானத் திரு மறை முனிவர் செப்பும்
சாபமே ஒத்தது அம்பு;-தருமமே வலியது அம்மா!
 

பாபமே இயற்றினாரை- பாவம் மிக்க செயல்களையே புரிந்து
வந்த அரக்கர்களை; பல நெடும்காதம்  ஓடி- பலகாதங்களாகிய
நெடும் தூரம்  விரைந்து  சென்று; தூபமே பெருகும் வண்ணம்-
மருகாந்தாரத் தீவு முழுதும் புகை சூழும்படி; எரி எழச் சுட்டது-
நெருப்பு எழும்படி சுட்டு அழித்தது; தீபமே அனைய ஞான- புற
இருளை மாற்றும்  விளக்குப்  போன்று, அக இருளை மாற்றவல்ல
தீபமாகிய ஞானம்   மிக்க;   திருமுறை  முனிவர்   செப்பும்-
தெய்வத்தன்மை  வாய்ந்த   வேதங்களை  அறிந்த  முனிவர்கள்
கூறுகின்ற; சாபமே ஒத்தது   அம்பு- சாப  மொழியை  ஒத்தது
இராமபாணம்; தருமமே  வலியது  அம்மா-  தருமம் எத்தனை
வலிவுடையது.
 

"நிறை மொழிமாந்தர்  பெருமை நிலத்து மறை  மொழிகாட்டி
விடும்' என்பது குறள்  கூறும் உண்மை. அன்றே என்பது அசை.
அம்மா - வியப்பிடைச் சொல். அதர்மத்தை விரைந்தழிக்கவல்ல
தர்மமே வலிமை மிக்கது என்பார் 'தருமமே வலியது' என்றார்.
 

(81)