பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 393

7. சேது பந்தனப் படலம்
 

இராமபிரான், வானர சேனையோடு இலங்கை செல்வதற்காகக்
கடலில்  அணைகட்டியதைக்   கூறும்  படலமாதலின்  இப்பெயர்
பெற்றது. சேது - அணை; பந்தனம் - கட்டுதல்.
 

சுக்கிரீவன் இராமபிரான் ஆணைப்படி - அணைகட்டுவதற்காக
அறிஞர்களுடனும்   வீடணனுடனும்   இலக்குவனுடனும்   கலந்து
ஆலோசித்து, நளனே அணைகட்டத்தகுதியுடையவன் என அவனை
அழைத்துப் பணித்தான். நளன்   உடன்பட்டு உரியன   கொணர்தி
என்றான்.   சாம்பன்   கடலை   அடைக்க வருமாறு  சேனைக்குக்
கூறினான் வானர சேனை மலைகளைக்  கொண்டு வந்து  குவித்தது.
நளன்   மலைகளை   அடுக்கத்    தொடங்கினான்.   வானரங்கள்
மலைகளைக் கைகளிலும் தோள்களிலும் தலைகளிலும் தாங்கி வந்து
அணைகட்ட உதவின.
 

திருவெண்ணெய் நல்லூரில் சடையப்ப  வள்ளல்  அடைக்கலம்
என வந்தவர்களை ஆதரித்துத் தாங்குதல் போல, நளன் வானரங்கள்
கொண்டு  வந்த  மலைகளைத் தூக்கினான் என்பார்  கம்பர். மூன்று
நாட்களில் அணைகட்டி முடிக்கப்பட்டது. வானரங்கள் மகிழ்ச்சியால்
ஆரவாரம் செய்தன.
 

ஆதிசேடன்   கிடந்தது   போலவும்,  இலங்கையாகிய  பெண்
கைகளை நீட்டிக்  கொண்டிருப்பது  போலவும் ஆகாய  கங்கையே
ஆறாகக்   கிடந்ததுபோலவும்   இந்திரவில்   போலவும்   அணை
அழகுறக்  காட்சியளித்தது. சுக்கிரீவனும்  மற்றவர்களும்  இராமனை
அடைந்து;  நூறுயோசனை  நீளமும்   பத்து   யோசனை அகலமும்
கொண்டதாக   சேதுகட்டப்பட்டுள்ளது   எனத்   தெரிவிக்கின்றனர்
என்பன இப்படலத்துள் கூறப்பட்டுள்ள செய்திகளாகும்.
 

நளனை அழைத்தல்
 

கலிவிருத்தம்
 

6674.

அளவு அறும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு
இளவலும் இனிது உடன் இருக்க, எண்ணினான்,
விளைவன விதி முறை முடிக்க வேண்டுவான்,
'நளன் வருக!' என்றனன்-கவிக்கு நாயகன்.