கவிக்கு நாயகன்- வானரசேனையின் அரசனான சுக்கிரீவன்; அரக்கர் கோமகற்கு இளவலும் இனிது உடன் இருக்க- அரக்கவேந்தனான இராவணனுக்குத் தம்பியான வீடணனும் இனிதே உடனிருக்க; அளவறும் அறிஞரோடு எண்ணினான்- அளவற்ற அறிஞர்களான சாம்பன் அனுமன், அங்கதன் ஆகியவர்களுடன் கலந்து ஆலோசித்தான் பின்னர்; விளைவன விதிமுறை முடிக்க வேண்டுவான்-இனி நிகழ வேண்டியவற்றை முறைப்படி நிறைவேற்ற வேண்டி; நளன் வருக என்றனன்- அதற்கேற்றவன் நளனே என முடிவு செய்து நளனை வருமாறு பணித்தான். |
கவிக்கு நாயகன் - சுக்கிரீவன். இதே தொடர் முன்னர் ஊர்தேடு படலத்தில் (4966) அனுமனைக் குறிக்கவந்தது. அங்கே அனுமனுக்குத் தலைமை (நாயகன்) பாகவதத்திறத்தாலும் கைங்கரியத் திறத்தாலும்; இங்கே சுக்கிரீவனுக்குத் தலைமை (மகாராஜா என வைணவ சம்பிரதாயம் குறிக்கும்) ஆட்சி பீடத்தால்" சேது கட்டுதலை நிறைவேற்றுதற்கு உரியவன் நளனே என்பதால் 'நளன் வருக என்றனன். நளன் தெய்வதச்சன் விசுவகர்மாவின் மகன். |
(1) |
சேதுகட்ட நளன் உடன்படுதல் |
6675. | வந்தனன், வானரத் தச்சன்; 'மன்ன! நின் |
| சிந்தனை என்?' என, 'செறி திரைக் கடல் |
| பந்தனை செய்குதல் பணி நமக்கு' என, |
| நிந்தனை இலாதவன் செய்ய நேர்ந்தனன். |
|
வந்தனன் வானரத் தச்சன்- வானரத்தச்சனான நளன் சுக்கிரீவனது ஆணைப்படி அங்கு வந்தான் வந்தவன்; மன்ன! நின் சிந்தனை என் என- சுக்கிரீவனை நோக்கி, அரசே! என்னை அழைத்த உனது கருத்து என்ன என்று கேட்க; செறிதிரைக்கடல்- செறிந்த அலைகளை உடைய இந்தக் கடலுக்கு; பந்தனை செய்குதல் பணி நமக்கு என- அணை கட்டுதல் நமக்குரிய பணியாகும் என்று சுக்கிரீவன் கூற; நிந்தனை இலாதவன்- பிறரால் நிந்திக்கப்படாத தொழில் வல்லவனாகிய நளன்; செய்ய நேர்ந்தனன்- அணை கட்டும் பணியைச் செய்ய உடன்பட்டான். |
நளன் வானரச் சிற்பி இவனைப் பற்றி: "வாநரத் தச்சன் மயன் குமரன், இரத்தக் கண்ணனைக் கொன்றவன், விச்வகர்மனாற் பிறந்தவன், சேது கட்டினவன் என அபிதான சிந்தாமணி விவரித்துள்ளது. (பக்.945). |